புழல் சிறையில் பப்ஜி மதனுக்கு வசதிகள் செய்ய 3 லட்சம் லஞ்சம் கேட்ட ஆடியோ விவகாரம்

By ரஜினி

பெண்கள் குறித்து இழிவாகப் பேசியும், தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடியதாக கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் பப்ஜி மதன் சொகுசாக இருக்க 3 லட்சம் லஞ்சம் கேட்டதாக ஆடியோ ஒன்று வைரலாகிவருகிறது. இதுகுறித்த நடவடிக்கையில், புழல் சிறை உதவி ஜெயிலர் செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

பெண்கள் குறித்து இழிவாகப் பேசியும், தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடியதாகவும் பப்ஜி மதன், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது தொடர்ந்து பல புகார்கள் வந்ததை அடுத்து, பப்ஜி மதனை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிறையில் பப்ஜி மதனுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்து மீண்டும் புழல் சிறையில் அடைக்கபட்ட மதனுக்கு, கரோனா தொற்று ஏற்பட்டு சிறையில் தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் சிறைக்குள் பப்ஜி மதனுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பாக, பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா சிறைத் துறை ஊழியரிடம் பேசும் ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த ஆடியோவில், ‘3 லட்சம் ரூபாய் பெரிய தொகை என்பதால் சொந்த ஊரான சேலத்தில் ரெடி செய்து கொண்டிருப்பதாகவும், ஓரிரு நாட்கள் அவகாசம் வேண்டுமென்றும் பணம் ரெடியான உடன் கொடுத்து விடுவதாகவும், அதுவரை மதனை பத்திரமாக தனிமைப்படுத்திப் பார்த்துக் கொள்ளுமாறு’ கிருத்திகா சிறைப் பணியாளரிடம் பேசுவதுபோல் பதிவாகி உள்ளது.

அதற்கு சிறைத் துறை ஊழியர், “பணத்தை சீக்கிரம் ரெடி பண்ணுங்க, மதன் பத்திரமாக உள்ளார். அவரை நாங்க பார்த்துக் கொள்கிறோம்” என பதில் கூறுவது பதிவாகி உள்ளது.

மற்றொரு ஆடியோவில், சம்பந்தப்பட்ட சிறைத்துறை ஊழியரை பெண் ஒருவர் தொடர்புகொண்டு, “நீங்கள் லஞ்சம் கேட்டதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும், அதைக் காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் மீடியாவுக்கு அனுப்பினால் உங்கள் கேரியரே பாழாகிவிடும். ஆகையால் இந்தப் பிரச்சினையை சுமூகமாக முடித்துக்கொள்ள வேண்டும், அதற்கு நீங்கள் என்ன செய்யப் போறீங்க, நேரில் சந்தித்து டீலை பேசிக் கொள்ளவோம்” என பெண் ஒருவர் சிறைத் துறை ஊழியரை மிரட்டுவது போன்று பதிவாகி இருந்தது.

இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிப் பரவுவதால், சிறைத் துறை உயர் அதிகாரிகள் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விவகாரம் குறித்து, புழல் சிறை உதவி ஜெயிலர் செல்வத்தை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து சிறைத் துறை டிஜிபி சுனில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கெனவே, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மற்றும் கர்நாடகா சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை வாழ்வதாக எழுந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கைதிகளின் உறவினர்களிடம் சிறைப் பணியாளர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு, சொகுசு வாழ்க்கைக்கு ஏற்பாடு செய்து தருவதாக குற்றசாட்டு எழுந்தது.

இதைத் தொடர்ந்து புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாகப் புகார்கள் வருவதையொட்டி, அவ்வப்போது போலீஸார் சிறையில் சோதனை நடத்தி செல்போன், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE