ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு உதவ காவல் துறை அதிகாரிகளின் பட்டியல் சமர்ப்பிக்க உத்தரவு

By கரு.முத்து

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். முதலில் மாநகர போலீஸாரும் அதன் பின்னர் சிபிசிஐடி போலீஸாரும் விசாரித்தும், இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், பின்னர் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

சிபிஐ விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால், மாநில அரசே விசாரிக்க வேண்டும் என டிஜிபிக்கு மனு அளித்துள்ளதாகவும், அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவின் பேரில் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், சிபிஐ தரப்பில் சீலிடப்பட்ட கவரில் விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைப் படித்த நீதிபதி, வழக்கு சரியான கோணத்தில் செல்வதாக கருத்து தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் காவல் துறை விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க தயார் என்று பதில் அளிக்கப்பட்டது.

இந்தக் கொலை வழக்கு விசாரணையில், சிபிஐக்கு உதவ தமிழக காவல் துறை அதிகாரிகள் பட்டியலை சமர்ப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ விசாரணைக்கு உதவ காவல் துறை அதிகாரிகள் பட்டியலை வழங்குகிறோம் என தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE