பெண் பயணி மீது அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் தாக்குதல் - நடந்தது என்ன?

By காமதேனு

சென்னை பெரும்பாக்கத்தில் அரசுப் பேருந்தை எடுக்க தாமதமானதால், ஓட்டுநரிடம் கேள்வி கேட்ட பெண் தாக்கப்பட்டுள்ளார். சக பயணிகள் போராட்டத்தில் குதித்ததால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த முருகம்மா என்பவர், பாரிமுனை செல்வதற்காக கணவர் செந்திலுடன் அதிகாலை 5 மணிக்கு அங்குள்ள பேருந்து பணிமனைக்குச் சென்றுள்ளார். 5.30 மணிக்கு எடுக்க வேண்டிய வழித்தடம் 102P பேருந்தை உரிய நேரத்தில் இயக்காமல் ஓட்டுநர் காலதாமதம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து முருகம்மா கேள்வி எழுப்பியதால் ஆத்திரமடைந்த ஓட்டுநரோடு சேர்ந்து நடத்துநரும், அப்பெண் மீதும் அவரின் கணவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் அப்பெண் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதைக்கண்ட பொதுமக்கள் பஸ் முன் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண் பயணி தாக்கப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததால், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தால் காலை 8 மணிவரை மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

தொடர்ந்து பேருந்து ஓட்டுநர்களும், நடத்துநர்களும் பயணிகளை அலைகழிப்பதாகவும், பேருந்தை தாமதமாக எடுப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE