தென்காசி: தென்காசி அருகே இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் பாஸ்கரன் (36). ராணுவத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த பாஸ்கரன், தனது நண்பர்களான விருதுநகர் மாவட்டம், சேத்தூரைச் சேர்ந்த மாரிமுத்து (33), தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையைச் சேர்ந்த கிருஷ்ணராஜா (35) ஆகியோருடன் நேற்று இரவு காரில் தென்காசி மாவட்டம், குற்றாலத்துக்கு வந்திருந்தார். அருவியில் குளித்துவிட்டு இன்று அதிகாலையில் காரில் ஊருக்கு சென்றுகொண்டு இருந்தனர்.
புளியங்குடியை அடுத்த நவாச்சாலை பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாஸ்கரன், கிருஷ்ணராஜா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மாரிமுத்து பலத்த காயமடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த புளியங்குடி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மாரிமுத்துவை மீட்டு தென்காசி அரசு மாவட்ட தலைமை
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்தவர்கள் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, ஆவடி அருகே உள்ள அண்ணனூரைச் சேர்ந்தர் மாதவன் (29). இவர் தனது தாயார் ஹேமலதா (60), அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜன் (35), இவரது மனைவி பூங்கொடி (30), மகன்கள் வெற்றிச் செல்வன் (7), மோகித்தம் (5), சசிகலா (48), இவரது மகள் காவியா (24) ஆகியோருடன் காரில் குற்றாலத்துக்கு வந்திருந்தனர். குற்றாலம் அருவியில் குளித்துவிட்டு நேற்று நள்ளிரவில் காரில் ஊருக்கு திரும்பிச் சென்றுகொண்டு இருந்தனர். கடையநல்லூர் அருகே புன்னையாபுரம் பகுதியில் சென்றபோது, கார் மீது எதிரே வந்த லாரி மோதியது.
இதில் காரில் சென்ற 8 பேரும் பலத்த காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சொக்கம்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹேமலதா பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 7 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.