வாலாட்டிய 5 தீவிரவாதிகள் கொலை!

By காமதேனு

ஜம்மு காஷ்மீரில் நேற்றிரவு நடைபெற்ற 2 என்கவுன்டர் சம்பவங்களில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

புல்வாமா மற்றும் புட்காம் மாவட்டங்களில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டனர். நேற்று(ஜன.29) மாலை தொடங்கிய இந்த வேட்டையில், நள்ளிரவில் நடைபெற்ற 2 என்கவுன்டர் சம்பவங்களில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

புல்வாமாவின் நைராவில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தபோது, இருதரப்பினருக்கும் இடையே இரவில் நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதன் முடிவில் ஜெய்ஷ் இ முகமது என்ற அமைப்பின் கமாண்டரான ஷாகித் வானி உட்பட 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதேபோன்று புட்காமில் நடைபெற்ற என்கவுன்டர் சம்பவத்தில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். இந்த 2 தீவிரவாத அமைப்புகளும் பாகிஸ்தான் ஆதரவில் நடைபெற்று வருபவை. கொல்லப்பட்டவர்களில் ஒருவன் பாகிஸ்தானை சேர்ந்தவன் என்று காஷ்மீர் மண்டல போலீஸ் அதிகாரிகள் உறுதி செய்தனர். கடந்த 1 மாதத்தில் மட்டும் 12 என்கவுன்டர் நடவடிக்கைகளில் 22 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக சனிக்கிழமை அன்று, அனந்த்நாக் மாவட்டம் ஹசன்போராவில் வசித்து வந்த தலைமைக் காவலர் அலி முகமது கனி என்பவரை, அவரது வீட்டருகே வைத்து தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதற்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE