உணவகக் கழிப்பறையில் ரகசிய வீடியோ பதிவு; கண்டுபிடித்த திமுக பெண் நிர்வாகி

By ரஜினி

சென்னை, கிண்டியில் உள்ள பிரபல உணவகத்தின் கழிப்பறையில், ரகசியமாக செல்போனை வைத்து பெண்களை வீடியோ எடுத்த ஊழியரை கையும்களவுமாகப் பிடித்துக் கொடுத்திருக்கிறார், திமுக பெண் மகளிரணி அமைப்பாளர் ஒருவர்.

சென்னை, மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி. இவர், திமுகவில் மதுவராயல் பகுதி மகளிர் அணி அமைப்பாளராக உள்ளார். வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அலுவலகத்தில் நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்க வந்தார் பாரதி. பின்னர், கிண்டி ரயில் நிலையம் அருகே உள்ள பிரபல தனியார் உணவகத்தில் மதிய உணவு சாப்பிடச் சென்றுள்ளார்.

அப்போது உணவகத்தில் உள்ள கழிப்பறைக்குச் சென்ற பாரதி, அங்குள்ள சுவற்றில் அட்டைப்பெட்டி ஒன்று இருப்பதைக்கண்டு, சந்தேகத்துடன் அதை எடுத்துப் பார்த்தார். அதில் செல்போன் கேமராவில் வீடியோ பதிவாகிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தன்னுடன் வந்த உறவினர்களோடு ஹோட்டல் நிர்வாகத்திடம் முறையிட்டதுடன், உடனே கிண்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த கிண்டி போலீஸார், உணவக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊழியர் கண்ணன் என்பவர், தனது செல்போனை கழிப்பறையில் வைத்து, பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்தது தெரியவந்தது. கண்ணனைக் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கண்ணன் பயன்படுத்திய செல்போனை பறிமுதல் செய்து, ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஊழியர் கண்ணன்

இதுகுறித்து பாரதி கூறும்போது, “ஊழியர்கள் கும்பலாகச் சேர்ந்து பாத்ரூமில் பெண்களை வீடியோ படம் எடுக்கும் செயலில் ஈடுபட்டிருக்கலாம். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

தகவல் அறிந்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உடனே காவல் ஆய்வாளரைத் தொடர்பு கொண்டு தகவல்களை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து போலீஸார் பிடிபட்ட கண்ணன் எத்தனை நாட்கள் இதுபோல், ரகசியமாக பெண்களை வீடியோ எடுத்துள்ளார், கண்ணனுக்கு உடந்தையாகச் செயல்பட்டது யார் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE