சமூக வலைதளங்களில் மதத்தின் பெயரில் பொய் தகவலை பரப்பினால் நடவடிக்கை!

By காமதேனு

"சமூக வலைதளங்களில் மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் வகையிலோ, பொது அமைதியை குலைக்கும் வகையிலோ செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் சமூகவலைதளங்கள் மூலம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டப்பேரவை தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த பாஜக வேட்பாளரும் தமிழக பாஜக இளைஞரணி தலைவருமான வினோஜ் பி.செல்வம் சமூகவலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், ஜேசிபி இயந்திரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கைவைத்திருப்பது போலவும், இந்து கோயில் இடிக்கப்படுவதை அவர் பார்ப்பது போலவும் கார்ட்டூன் படத்தை போட்டு, 200 நாட்களில் 300 இந்து கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு போட்டுள்ளார் வினோஜ் பி.செல்வம். அந்த பதிவில், விடுதலைப்போரில் தமிழகம் என குடியரசு தினத்தில் கருப்பு கொடி பறக்கவிட்டவர்கள் 130 புனிதமான இந்து ஆலயங்களை இடித்துள்ளதாக செய்தி. சுதந்திர போரைக் காட்டிலும் இந்துமதம் இப்போதுதான் அதிகம் நசுக்கப்படுகிறது! உள்ளாட்சியிலாவது நல்லாட்சி மலர்ந்து, விடுதலை பெற ஆதரிப்பீர் பாஜக கூட்டணிக்கு!" என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால்

இந்த பதிவு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர், சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், “வினோஜ் பி.செல்வம் என்பவர் தன்னுடைய ட்விட்டர் ஹேண்டிலில், பொய்யான தகவலை, வதந்தியை மக்களிடையே பரப்பும் நோக்கில் பதிவிட்டதாகவும் அந்தப் பதிவானது மதத்தின் அடிப்படையில் மக்களிடையே வெறுப்பையும், பகைமையையும் உருவாக்கிப் பொது அமைதியை குலைக்கும் வகையிலும் உள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, “மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் வகையிலோ அல்லது பொது அமைதியை குலைக்கும் வகையிலோ, பொய்யான செய்திகளையும், உண்மைச் செய்திகளை திரித்தும் சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்றவற்றில் வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE