கோவை அரசு அலுவலகத்தில் அத்துமீறி பிரதமர் படத்தை மாட்டிய பாஜக பிரமுகர் கைது!

By காமதேனு

கோவையில் அரசு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து பிரதமர் மோடி படத்தை மாட்டிய பாஜக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கோவை அருகே பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்குள் பாஜக அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையிலான பாஜகவினர் உள்ளே புகுந்து பிரதமர் மோடியின் படத்தை மாட்டினர். இதனை தடுத்த பேரூராட்சி அலுவலக ஊழியர்களிடம் பாஜகவினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி அலுவலகத்திற்கு வந்து புகைப்படம் வைப்பது தவறு என்று கூறிய ஊழியர்கள், அனுமதி பெற்றுக் கொண்டு படத்தை மாட்டிக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். இதனால் பாஜகவினருக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அத்துமீறி மோடியின் படத்தை வைத்த பாஜகவினர்

முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடியின் படம் வைக்க வேண்டும் எனவும், பிரதமர் மோடியின் புகைப்படத்தை கழற்றினால் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் பாஜகவினர் மிரட்டுவது போன்ற வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனிடையே, அரசு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பாஜக அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE