கோவை அருகே உயர் ரக போதைப்பொருள் விற்ற பெண்கள் உட்பட 6 பேர் கைது

By KU BUREAU

கோவை: கோவை அருகே, உயர் ரக போதைப் பொருள் விற்பனை செய்த பெண்கள் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உயர் ரக போதைப் பொருள் விற்பனையில் சிலர் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், தொண்டாமுத்தூர் போலீஸார் முட்டிபாளையம் என்ற இடத்தில் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அங்குள்ள ஒரு தனியார் பாக்கு ஷெட்டில் சோதனை நடத்திய போது, 10 கிராம் அளவுக்கு உயர் ரக போதைப் பொருளை பிளாஸ்டிக் டப்பாக்களில் போட்டு விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

அங்கிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆஷ்மா காதுன் (40), ஜஹீரா காதுன் (29), குதிஜா காதுன் (37) ஆகிய பெண்கள் மற்றும் இத்ரிஷ் அலி (29), அலி ஹூசைன் (48), ரபிபுல் இஸ்லாம் (24) ஆகிய 6 பேரை பிடித்து விசாரித்தனர். அசாம் மாநிலத்தில் இருந்து உயர் ரக போதைப் பொருளை கடத்தி கோவைக்கு கொண்டு வந்து இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து ரூ.2.10 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள், அவற்றை அடைக்க தேவைப்படும் 1,900 பிளாஸ்டிக் டப்பாக்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். போலீஸார் கூறும்போது,‘‘இது கோகைன் போன்ற ஒரு வகை போதைப் பொருள். ஊசி மூலம் உடலில் ஏற்றுவர். போதைப்பொருள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், அதன் பெயர் தெரியவரும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE