மகளிர் கல்லூரி வாட்ஸ்அப்பில் மேலாடை இல்லாத தனது படத்தைப் பகிர்ந்த விரிவுரையாளர்

By கே.எஸ்.கிருத்திக்

கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில், கொடைக்கானல் மட்டுமின்றி வெளியூரைச் சேர்ந்த மாணவிகளும் படித்துவருகிறார்கள். இந்தக் கல்லூரியில் புதுச்சேரியைச் சேர்ந்த செந்தில்குமார், கடந்த 2020-ம் ஆண்டு தற்காலிக விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார்.

நல்ல உடற்கட்டுள்ள இவர், கல்லூரியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில், தான் மேலாடை இல்லாமல் உடற்பயிற்சி செய்த புகைப்படங்களை கல்லூரி மாணவிகள் உள்ள வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, சில மாணவிகளிடம் தனிப்பட்ட முறையிலும் அந்தப் படங்களை விரிவுரையாளர் செந்தில்குமார் காட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவிகள் பெண் பேராசிரியர்களிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, முதல்வரின் கவனத்துக்கு புகார் கொண்டுசெல்லப்பட்டது. இதையடுத்து கல்லூரி முதல்வர் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து மாணவிகள் மற்றும் பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் விரிவுரையாளர் செந்தில்குமார் வாட்ஸ்அப் குழுக்களில் அத்தகையை புகைப்படங்களை பதிவிட்டது உண்மைதான் என்று நிரூபனமானது.

இதைத் தொடர்ந்து அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஆனாலும், அவருக்கும் அவர் மீதான புகாரை முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசென்ற பெண் பேராசியர்களுக்கும் இடையே பிரச்சினை தொடர்வதால், இந்தப் பிரச்சினையை போலீஸ் கவனத்துக்குக் கொண்டுசெல்ல கல்லூரி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE