சென்னை ஐடி ஊழியர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த ஸ்விகி ஊழியர்!

By காமதேனு

சென்னை அருகே ஸ்விகி ஊழியர் ஒருவர் உணவுப் பையில் கஞ்சா வைத்து ஐடி ஊழியர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்தபோது தனிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.

தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து காவல்துறை ஆணையர் ரவியின் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் பழைய மகாபலிபுரம் சாலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, ஸ்விகி டிசர்ட் அணிந்து ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். பின்னர் தன்னிடம் இருந்த உணவுப் பையிலிருந்து பொருட்களை அங்கு நின்றுக் கொண்டிருந்தவர்களிடம் விற்பனை செய்துள்ளார். இதனை கண்காணித்த தனிப்படையினர், சந்தேகத்தின் பேரில் அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அந்த இளைஞர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் குமார் சேனாபதி என்பது தெரியவந்தது. மேலும் இவர், ஸ்விகி உணவுப்பையில் கஞ்சாவை மறைத்து வைத்து ஐடி நிறுவன ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோருக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிந்தது.

இதையடுத்து, வடமாநில இளைஞரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்ததோடு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஸ்விகி ஊழியர் போல் நடித்து வடமாநில இளைஞர் ஒருவர் மாணவர்களுக்கும், ஐடி ஊழியர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE