ரஜினி பட விவகாரம்; மலேசிய நிறுவனத்திடம் ரூ.15 கோடி மோசடி

By ரஜினி

மலேசியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் நிறுவனம் மாலிக் ஸ்டிரிம்ஸ் கார்ப்பரேஷன். இதன் தமிழ்நாட்டு கிளை நிர்வாக இயக்குநர் ராஷிக் அகமது கனி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முரளி, தன்னிடம் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமம் இருப்பதாகக் கூறி, கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தங்கள் நிறுவனத்திடம் 30 கோடி ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஒப்பந்தம் செய்துகொண்டார்.

பணத்தைப் பெற்ற பின் விசாரித்தபோது, ‘பேட்ட’ திரைப்படத்தின் விநியோக உரிமை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம். இதையடுத்து, கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்கும்போது, கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 கோடி ரூபாய் பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள 15 கோடி ரூபாய்க்கு, 5 கோடி ரூபாய்க்கு முன்தேதியிட்ட காசோலையும், மீதமுள்ள 10 கோடிக்கு ‘காஞ்சனா 3’ மற்றும் ‘நான் ருத்ரன்’ திரைப்படங்களின் விநியோக உரிமையைத் தருவதாகக் கூறி மீண்டும் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

ஆனால், காஞ்சனா 3 படத்தின் விநியோக உரிமையும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இல்லை என்பதும், நான் ருத்ரன் படம் இயக்கப்படாமலேயே கைவிடப்பட்டதும் தெரியவந்தது. மேலும் 5 கோடிக்கான காசோலையும் முரளியின் வங்கிக்கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது.

தொடர்ந்து மோசடி செய்ததன் காரணமாக ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளரும் தற்போதைய தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான முரளியிடம் முறையிட்டபோது, பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாது என்று மிரட்டும் தொனியில் எங்களிடம் பேசினார். எனவே முரளி மீது கடந்த ஆண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தேன். அந்தப் புகார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் எவ்வித விசாரணையும் இல்லாமல், முடித்து வைக்கப்பட்டது.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முரளி எங்களிடம் பணம் வாங்கி மோசடி செய்ததற்கான அனைத்து ஆதாரங்களும் இருந்தபோதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளருமான முரளி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் முரளி மீது மோசடி மற்றும் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். அடுத்தகட்டமாக, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளரான முரளிக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE