திகில் படங்களை மிஞ்சிய திலீப்பின் நிஜம்!

By என்.சுவாமிநாதன்

நடிகையைக் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கிய மலையாள நடிகர் திலீப் மீது, அடுத்தடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வரிசைகட்டுகின்றன. பொதுவெளியில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாத, பாதிக்கப்பட்ட நடிகையே பகிரங்கமாகப் பேசும் அளவுக்கு சூழலை மாற்றியிருக்கிறார் திலீப். தனது நெருங்கிய நண்பராலேயே புதிய வழக்கு ஒன்று திலீப் மீது பாய்ந்துள்ள நிலையில், மீண்டும் திலீப் விவகாரம் கேரளத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது!

திலீப்_காவ்யா மாதவன் திருமணத்தின் போது...

கடத்தலின் பின்னணி

மலையாளத் திரையுலகில் ‘ஜனப்ரிய நாயகன்’ என்பது திலீப்பின் அடைமொழி. ஆரம்பத்தில் மேடையில் நகைச்சுவை, மிமிக்ரி என செய்து வந்தவர், 1991-ல் மலையாள இயக்குநர் கமலிடம் உதவியாளராகச் சேர்ந்தார். 1994-ல் ‘மானத்தே கொட்டாரம்’ படத்தின் மூலம் நடிகராக அவதாரமெடுத்தார். சினிமாவில் பிரபலமானதும் நடிகை மஞ்சுவாரியரைக் காதலித்து மணமுடித்தார். திலீப் உதவி இயக்குநராக இருந்த காலத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் காவ்யா. “அங்கிள்...” என வாய் நிறையப் புன்னகையோடு திலீப்பைச் சுற்றிவந்து, கைப்பிடித்து விளையாடிய காவ்யாதான் இப்போது திலீப்பின் இரண்டாவது மனைவி!

காவ்யாவுடன் திலீப் நெருக்கம் காட்டுவதை, அவரது முதல் மனைவி மஞ்சுவாரியரிடம் சொல்லி எச்சரித்தார் ஒரு பிரபல நடிகை. இதனால் ஏற்பட்ட மனக்கசப்பில், 2014-ல் மஞ்சுவாரியர் திலீப்பிடமிருந்து விவாகரத்து பெற்றார். அதன் பிறகு வாரியரை மறந்தாலும், தன்னைப்பற்றி தனது மனைவியிடம் போட்டுக்கொடுத்த அந்தப் பிரபல நடிகையை மறக்கவே இல்லை திலீப்.

இந்நிலையில்தான், கொச்சியில் ’ஹனிபி டூ’ என்ற மலையாளப்படத்தில் நடித்துவிட்டுத் திரும்பிய அந்தப் பிரபல நடிகையை ஒரு கும்பல் கடத்தியது. அவரது காரை வழிமறித்து கடத்தி வேனுக்கு மாற்றியது. தொடர்ந்து அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்து, அதை செல்போனிலும் வீடியோவாகப் பதிவு செய்தது. போலீஸில் புகார் கொடுத்தால், அந்த வீடியோவை பகிரங்கப்படுத்துவோம் எனவும் மிரட்டினார்கள். ஆனாலும் துணிச்சலாக போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனார் நடிகை. இவ்வழக்கு எங்கெல்லாமோ சுற்றிக் கடைசியில் திலீப்பிடம் வந்து முடிந்தது. கடத்தலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான பல்சர் சுனிலோடு சேர்ந்து, இச்சம்பவத்துக்கு நான்காண்டுகள் திட்டம் தீட்டியிருக்கிறார் திலீப். பல்சர் சுனிலை மலையாள சினிமா உலகில் பார்த்திருப்பதாக நடிகை காட்டிய அடையாளமே, இவ்வழக்கில் திருப்புமுனையாக அமைந்தது.

எளிதில் கடந்துவந்த திலீப்

இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட நடிகைக்கு நீதிகேட்டு, மலையாளத் திரையுலகமே திரண்டு போராட்டம் நடத்தியது. அப்போதும்கூட யாருக்கும் சந்தேகமே வராதபடி, நடிகைக்கு ஆதரவாகக் கூட்டத்தில் பங்கேற்று அறச்சீற்றம் பொங்கப் பேசினார் திலீப். கடைசியில் அவரே இவ்வழக்கில் கைதானதும், மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வின் பொருளாளர் பதவியில் இருந்த திலீப் அதிலிருந்தும் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இதனிடையே, பல்சர் சுனில் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிறை சென்ற திலீப், 85 நாட்களுக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகி ஆச்சரியமூட்டினார். அதே காலகட்டத்தில் திலீப் நடித்த ராம்லீலா, வெல்கம் டு சென்ட்ரல் ஜெயில், கம்மார சம்பவம் படங்கள் ரிலீசாகி ஹிட் அடித்தது தனிக்கதை. அவருக்கான அந்த மார்க்கெட் இன்னமும் குறைந்தபாடில்லை.

போலீஸைக் கொல்ல சதி

இந்த வழக்கின் தாக்கமே சிறிதும் தெரியாத வகையில் தொடர்ந்து மலையாளத் திரையுலகில் இயங்கி வரும் திலீப்புக்கு, அவரது இன்னொரு நண்பர் மூலமாக இப்போது புதிய சிக்கல் பிறந்திருக்கிறது. மலையாள இயக்குநரும் திலீபின் நண்பருமான பாலசந்திரகுமார், அண்மையில் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில், “பல்சர் சுனிலை திலீப்புக்கு ஏற்கெனவே நன்கு தெரியும். நடிகைக்குப் பாலியல் தொல்லை கொடுத்து எடுக்கப்பட்ட வீடியோவை திலீப் தனது நண்பர்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்ததை நானே பார்த்திருக்கிறேன். அந்த வழக்கில் ஜாமீனில் வந்த திலீப், தன்னைக் கைது செய்த எஸ்பி சுதர்சனின் கைகளை வெட்டவேண்டும். வழக்கை விசாரித்து, கைது செய்யக் காரணமாக இருந்த டிஎஸ்பி பைஜூ பலோஸை லாரி ஏற்றிக் கொலை செய்துவிட்டு விபத்து போல் சித்தரிக்க வேண்டும் என்றெல்லாம் ஸ்கெட்ச் போட்டார்.

அத்துடன், பாலியல் தொல்லையின் போது அந்த நடிகை கதறும் சத்தம் வீடியோவில் குறைவாக இருப்பதாகச் சொல்லி, அந்த வீடியோவை ஒரு ஸ்டுடியோவுக்கு அனுப்பி சத்தத்தை கூட்டிவைத்துக் கேட்டு ரசித்தார்” என அதிரவைக்கும் தகவலை கொளுத்திப் போட்டார்.

இந்தப் பேட்டி வைரலானதுமே, சம்பந்தப்பட்ட நடிகை தனக்கு நீதிகேட்டு கேரள முதல்வருக்கு புகார் அனுப்பினார். இதைத் தொடர்ந்து திலீப், அவரது சகோதரர் அனூப், அவரது மைத்துனர் சூரஜ் ஆகியோர் மீது புதிதாக இன்னொரு வழக்கும் பதிவானது. இதனிடையே, காவல் துறை அதிகாரிகளை கொலை செய்ய திலீப் வியூகம் வகுக்கும் ஆடியோவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. திலீப்புக்கும், பாலசந்திரகுமாருக்கும் இடையே என்ன மனத்தாங்கல் வந்து, இதையெல்லாம் பொதுவெளியில் பேசினார் என்ற விவரம் தெரியவில்லை.

சாட்சிகளை வளைத்த திலீப்

நடிகையைக் கடத்திய வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவர் சாகர் வின்சென்ட். அவர் உட்பட 37 சாட்சியங்களை திலீப் தன் கூலிப்படையை ஏவி மிரட்டி, பிறழ் சாட்சி ஆக்கியதாக விசாரணை அதிகாரிகளே சொல்கின்றனர். திலீப்புக்கு எதிராக அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர்கள் இருவர் ராஜினாமா செய்துள்ளனர். ஏற்கெனவே வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த அணில்குமார், கடந்த ஆண்டின் இறுதியில் ராஜினாமா செய்தார். இப்படி திலீப் போட்ட கணக்குகள் எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருக்கும்போதுதான், அவரது நண்பர் பாலசந்திரகுமார் கொடுத்த பேட்டி திருப்புமுனையானது.

வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுவிடுவோம் என ரிலாக்ஸ்டாக இருந்த திலீப், நண்பரின் இந்த திகில் பேட்டியால் நிலைகுலைந்து நிற்கிறார். இந்தப் பேட்டியை மையமாக வைத்து, நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்கச் சொல்லிவிட்டது கொச்சி நீதிமன்றம். அதற்கு முன்பாக, போலீஸ் அதிகாரிகளை கொலைசெய்ய திலீப் சதித் திட்டம் தீட்டிய வழக்கு, அவரது கழுத்தை நெருக்குகிறது. இந்த வழக்கில் எந்த நிமிடமும் திலீப் கைதுசெய்யப்படலாம். இதைத் தொட்டு மேலும் சில வில்லங்க வழக்குகளும் திலீப்பின் காலைச் சுற்றலாம் என்றும் சொல்கிறார்கள்.

பாலசந்திரகுமாருடன் திலீப்

மனம் கவர்ந்த நாயகனாக திலீப்பை மனதில் ஏற்றிக்கொண்ட மலையாளிகள் பலர் உண்டு. இந்நிலையில், திலீப்பின் மறுபக்க மர்மங்கள் அவரது நண்பர் மூலமாகவே வெளிச்சத்துக்கு வந்திருப்பதால், அதிர்ச்சியில் உடைந்துபோய்க் கிடக்கிறார்கள் அவரது ரசிகர்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE