ரூ.40 கோடி மதிப்புள்ள தொன்மையான 12 சிலைகள் மீட்பு

By ரஜினி

ஒற்றை சிலையைக் கைப்பற்றப் போன சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் மொத்தமாக 12 சிலைகளை மீட்டுள்ளனர்.

மாமல்லபுரம் அருகே, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில், தொன்மையான பார்வதி சிலை ஒன்று பதுக்கி வைத்து வெளிநாட்டுக்கு கடத்தவிருப்பதாக, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் அந்தத் தொன்மையான பார்வதி சிலைக்கு பதிலாக, தனி அறை ஒன்றில் பெட்டிகளுக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த 11 பழமையான உலோகச் சிலைகளை கண்டுபிடித்தனர்.

11 சிலைகளையும் மீட்ட அதிகாரிகள், சட்டவிரோதமாக சிலைகளை பதுக்கி வைத்திருந்த காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஜாவித்ஷா என்பவரைப் பிடித்து விசாரித்தனர். மீட்கப்பட்ட சிலைகளை இந்திய தொல்லியல் துறைக்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்டதில், அதில் 8 சிலைகள் மிகவும் பழமையானவை எனத் தெரியவந்தது. எனினும் வெளிநாட்டுக்கு கடத்தவிருந்த பார்வதி சிலை கிடைக்காததால், போலீஸார் ஜாவித்ஷாவிடம், ‘தாங்கள் தேடி வந்தது பார்வதி சிலையை மட்டும்தான். அதை ஒப்படைத்தால் பிடிபட்ட மற்ற சிலைகளை திருப்பிக் கொடுத்து விடுவதாக’ கதை சொல்லி வலைவிரித்தனர்.

கைது செய்யப்பட்ட ஜாவித்ஷா

இதை நம்பிய ஜாவித்ஷா, மண்ணுக்கு அடியில் புதைத்து வைத்திருந்த 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான பார்வதி சிலையை, அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அதைத் தொடர்ந்து போலீஸார் ஜாவித்ஷாவை கைது செய்து, சிலைகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் ஜாவித்ஷாவிடம் நடத்திய தொடர் விசாரணையில், அவரது சகோதரர் ரியாஸ் தொன்மையான சிலைகளை வெளிநாட்டுக்குக் கடத்தி விற்பனை செய்து வந்ததும், கடந்த சில வருடங்களாக சிலைக் கடத்தல் தொழிலில் ஈடுபட்ட ஜாவித்ஷா, தஞ்சாவூரில் உள்ள சங்கம் ஹோட்டலில் கடை வைத்து இதுபோன்ற சிலைகளை வியாபாரம் செய்துவந்ததும் தெரியவந்தது. கரோனா காரணமாக அங்கு கடையை காலிசெய்து விட்டு சென்னைக்கு வந்து கடத்தல் வியாபாரத்தைத் தொடங்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

பத்து தலை ராவணன் சிலை

மீட்கப்பட்ட சிலை

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ஜெயந்த் முரளி, “மீட்கப்பட்ட சிலைகளின் மதிப்பு 30-40 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. சிலைகளைப் பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் மற்றொரு முக்கிய குற்றவாளியான காஷ்மீரைச் சேர்ந்த ரியாஸ் என்பவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட தொன்மையான பார்வதி சிலை உட்பட 8 சிலைகளில் பல சிலைகள் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்தச் சிலைகளில் மிக அரியதான 10 தலை ராவணன் சிலையும் அடக்கம். இந்தியாவில் மகாராஷ்டிரா உட்பட 5 இடங்களில் மட்டுமே ராவணனுக்கு கோவில் உள்ளது. மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தும் எந்தெந்தக் கோயில்களில் இருந்து திருடப்பட்டன என்பது குறித்து விசாரணை தொடர்கிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE