திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் துப்பாக்கிமுனையில் கொள்ளை

By ரஜினி

சென்னை, திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டரில், இன்று அதிகாலையில் துப்பாக்கிமுனையில், 1.32 லட்ச ரூபாயை 3 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

கொள்ளை நடந்த கவுன்ட்டரில் ரயில்வே போலீஸார் ஆய்வு

சென்னை, திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்துக்கு இன்று காலை 5 மணி அளவில் டிக்கெட் எடுக்க கவுன்ட்டருக்கு பயணிகள் சிலர் வந்துள்ளனர். அப்போது டிக்கெட் கவுன்ட்டர் நீண்டநேரமாக திறக்கப்படாததால், சந்தேகமடைந்த பொதுமக்கள் ஜன்னல்வழியாக உள்ளே எட்டிப் பார்த்தபோது, ஊழியர் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்டு இருப்பதைக் கண்டு அதிரச்சியடைந்தனர். உடனே, இது குறித்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

ரயில்வே டிஎஸ்பி ஸ்ரீகாந்த் தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்துக்கு உடனே விரைந்துவந்து, பூட்டை உடைத்து உள்ளே சென்று கட்டிப் போடப்பட்டிருந்த ஊழியர் டீகா ராம் மீனா(28)வின் கட்டுகளை அவிழ்த்து மீட்டனர்.

பின்னர், டீகா ராம் மீனா(28)விடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், டீகா இரவுப் பணியில் தனியாக இருந்தபோது, அதிகாலை சுமார் 4 மணியளவில் 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று டிக்கெட் கவுன்ட்டருக்குள் புகுந்து அவர்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி நாற்காலியில் உட்கார வைத்து கை மற்றும் வாயைக் கட்டிப்போட்டதாகத் தெரிவித்துள்ளார். பின்னர், அந்த கும்பல் கவுன்ட்டரில் இருந்த 1.32 லட்ச ரூபாயை கொள்ளையடித்துக் கொண்டு கதவைப் பூட்டிவிட்டுத் தப்பிச்சென்றதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஊழியர் டீகா அளித்த புகாரின் பேரில், ரயில்வே எஸ்பி அதிவீர பாண்டியன் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டதுடன், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. டிக்கெட் கவுன்ட்டரில் சிசிடிவிக்கள் இல்லாததை அறிந்து, கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களைப் பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டு, ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE