கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்த மோசடி புகார்கள்

By ரஜினி

வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்தது குறித்த புகார்கள் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைந்திருப்பதாக, வேலைவாய்ப்பு மோசடி தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சில கும்பல்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு, போலி நியமன ஆணைகளை வழங்கி மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி பிரிவு போலீஸார், மோசடியில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்து, பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் வேலை வாங்கித் தருவதாகப் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக சென்னை வேலைவாய்ப்பு மோசடி தடுப்புப் பிரிவு போலீஸில் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 21 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 2 முக்கிய குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின்கீழ் அடைத்துள்ளனர்.

மோசடி நபர்களிடம் பொதுமக்கள் இழந்தவற்றில் இருந்து ரூ.50 லட்சம் மீட்கப்பட்டதோடு, 25 வங்கிக் கணக்குகளை முடக்கி இருப்பதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

2021-ம் ஆண்டு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 68 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளளனர். 10 பேரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்துள்ளது காவல் துறை.

இந்த ஆண்டு பொதுமக்கள் மோசடி நபர்களிடம் இழந்தவற்றில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள நிலம், ரூ.16.65 லட்சம் ரொக்கம், 65 பவுன் தங்க நகை, ரூ.89,25,000 மதிப்பிலான ஆவணங்கள், 12 கார்கள், 8 இருசக்கர வாகனங்கள், 33 வாட்ச் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, வேலை வாய்ப்பு மோசடி தடுப்புப் பிரிவுப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

2020-ம் ஆண்டைவிட இந்த ஆண்டு வழக்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் குண்டர் சட்டத்தின்கீழ் அடைக்கப்பட்டோர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE