ஐபோன் வாங்குவதற்காக தாயின் நகையை எடுத்து இன்ஸ்டாகிராம் காதலனிடம் கொடுத்த சிறுமி @ திருப்பூர்

By எம்.நாகராஜன்

திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்த 17 வயசு சிறுவன் மற்றும் 15 வயது சிறுமிக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த சில மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் தகவல்களை பரிமாறி வந்துள்ளனர். இது நாளடைவில் காதலாக மாறியது.

இதனையடுத்து சிறுமி தன்னிடம் சிறிய அளவிலான செல்போன் தான் உள்ளது என்றும் தனக்கு அனைத்து வசதிகளுடனும் கூடிய போன் வாங்கி தரும்படியுன் தன் காதலனிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த சிறுவன் தன்னிடம் தற்போது பணம் இல்லை என்றும் நீ பணம் எடுத்து வா உனக்கு புதிய செல்போன் வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் சிறுமி தனது வீட்டிலிருந்த தன் தாயின் 7 பவுன் நகையை எடுத்துக்கொண்டு காதலனை பார்க்க திருப்பூர் மத்திய பஸ் நிலையம் வந்துள்ளார். அங்கு காதலனை சந்தித்து நகையை கொடுத்துள்ளார்.

சிறுவன் நகையை விற்று அதில் கிடைத்த பணத்தின் மூலம் இருவருக்கும் தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான ஐபோன்களை வாங்கி உள்ளார். பின்னர் இருவரும் திருப்பூரில் பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில் வீட்டிலிருந்த நகை காணாமல் போயிருப்பதை கண்டு சிறுமியின் தாய் அதிர்ச்சி அடைந்தார். சிறுமி புதிய ஐபோனை பயன்படுத்துவதை பார்த்த தாயார் ‘உனக்கு எப்படி இந்த போன் வந்தது?’ என்று கேட்டபோது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து விசாரித்தபோது அவர் நகையை எடுத்துச் சென்றதை ஒப்புக்கொண்டார். மேலும் காதலனுடன் சேர்ந்து செல்போன் வாங்கியதையும் கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை அழைத்து விசாரணை நடத்திய போது அவரும் உண்மையை ஒத்துக் கொண்டார்.

பின்னர் சிறுவனிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்ததோடு தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE