அரக்கோணம் அருகே திரைப்பட பாணியில் ஏர்கன் மூலம் சுட்டுக் கொள்ளை அடித்ததாக, பிளஸ் 2 மாணவர் உள்ளிட்ட 2 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தில் விவசாய நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீட்டில் வசித்து வருபவர் புஷ்கரன்(23). இவரது வீட்டில் கடந்த 17-ம் தேதி நள்ளிரவு கதவு தட்டும் சத்தம்கேட்டு, கதவைத் திறந்த புஷ்கரன் வெளியே முகமூடி அணிந்த கும்பல் கொள்ளையர்களை பார்த்ததும், கதவை மீண்டும் மூடியுள்ளார். அப்போது, ஜன்னல் வழியாக கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர் துப்பாக்கியால் சுட்டதில் புஷ்கரன், அவரது பாட்டி ரஞ்சிதம்மாள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
அந்த நேரத்தில் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்த கும்பல் புஷ்கரனை கத்தியால் தாக்கி, வீட்டில் பீரோவில் இருந்த சுமார் 25 ஆயிரம் ரொக்கம், பெண்கள் அணிந்திருந்த சுமார் 15 பவுன் தங்க நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
இது தொடர்பாக அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகேயுள்ள வியாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னராசு(23) என்பவர், இதுபோன்ற குற்றச்செயல்களில் ஏற்கெனவே ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவரை தனிப்படையினர் டிச.26 அன்று இரவு பிடித்து விசாரித்தபோது, புஷ்கரன் வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். அவர் கொடுத்த தகவலின்பேரில், கொள்ளையில் ஈடுபட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பிளஸ் 2 மாணவர் ஒருவரையும் தனிப் படையினர் நேற்று(டிச.27) கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து ஏர் கன், பெரிய வாள், கத்தி மற்றும் ஏர் கன்னில் பயன்படுத்தப்படும் இரும்பு ரவைகள் அடங்கிய பெட்டியையும் பறிமுதல் செய்தனர்.
போலீஸ் விசாரணையில் பால்வாய் சத்திரம் கிராமத்தில் ரேணு என்பவர் வீட்டில் கடந்த அக்டோபர் மாதம் இவர்கள் கொள்ளையடித்ததும், அப்போது ரேணு தனது சொந்த பாதுகாப்புக்காக வாங்கி வைத்திருந்த ஏர்கன்னை எடுத்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த ஏர்கன்னை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று யூடியூப் வீடியோக்கள் மூலம் பார்த்து பிளஸ் 2 மாணவன் பயிற்சியும் எடுத்துள்ளான். அவன்தான் புஷ்கரன் வீட்டில் கொள்ளையடிக்கும்போது ஏர்கன் மூலம் சுட்டுள்ளான் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.