தமிழகமெங்கும் போலி நேர்முகத் தேர்வுகள்; 8 பேர் கைது

By காமதேனு

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவின் பெயரில், தமிழகமெங்கும் போலியான நேர்முகத் தேர்வுகள் நடத்தி மோசடியில் ஈடுபட்டு வந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவின் தென் மண்டல அதிகாரி சுந்தரேசன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். இந்தப் புகாரில், தங்களுடைய குழுமத்தின் பெயர், முத்திரையைப் பயன்படுத்தி காஞ்சிபுரம், சேலம், மதுரை, கோவை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் போலியான நேர்முகத் தேர்வுகள் நடைபெறுவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடிப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாநில அரசின் ஓட்டுநர், அலுவலக உதவியாளர் ஆகிய பணிகளுக்கு ரூ.2 முதல் 4 லட்சம் வரை கொடுத்து ஏமாந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் சுரேந்திரன், ஆய்வாளர் மகாலட்சுமி ஆகியோர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடிவந்தனர்.

இந்நிலையில் அடுத்த நேர்முகத் தேர்வு திருப்பத்தூரில் நடைபெறப்போவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போலீஸார் விரைந்து சென்றனர். அங்கு இந்த மோசடியில் ஈடுபட்டதாக திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சூரியா, அருண்குமார், தர்மலிங்கம், தயாநிதி, ராஜேஷ், சக்கரவர்த்தி, பிரபு மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த யோகானந்தம் ஆகியோரை போலீஸார் நேற்று(டிச.27) கைது செய்து சென்னை அழைத்துவந்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதுவரை சுமார் ரூ.1.50 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. மேலும் 2 முக்கிய குற்றவாளிகளை தீவிரமாகத் தேடிவருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். நேற்று கைது செய்த 8 பேரையும் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். ‘அரசு வேலைகளுக்காக இதுபோல் மற்றவர்களை நம்பி ஏமாற வேண்டாம்’ என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE