பாச்சலூர் மாணவி உயிரிழப்பு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

By காமதேனு

திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூரில் 5-ம் வகுப்பு சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கை, சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை அருகே பாச்சலூர் மலைக்கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, அப்பகுதியிலுள்ள நடுநிலைப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். டிச.15 அன்று, அந்தச் சிறுமி தனது அக்கா, தம்பியுடன் பள்ளிக்குச் சென்றார்.

மதிய உணவு இடைவேளைக்கு சிறுமி வரவில்லை என்ற தகவல் அறிந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் அனைவரும் சிறுமியைத் தேடி அலைந்தனர். அப்போது அந்தப் பள்ளிக்கு அருகிலே உள்ள புதர் பகுதியில் சிறுமி முகம் எரிந்த நிலையில், குற்றுயிராக உயிருக்குப் போராடியபடி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சிறுமியை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சிறுமியின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.

சந்தேக மரணம் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஒரு வாரமாகியும் குற்றத்தையும் குற்றவாளிகளையும் கண்டறிய முடியாமல் காவல் துறை திணறி வருகிறது. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காதவரைக்கும் சிறுமியின் உடலை வாங்கமாட்டோம் என உறவினர்களும், பொதுமக்களும் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

டிச.20 அன்று, இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ரவிக்குமார் மற்றும் நிர்வாகிகள், ‘பாச்சலூர் அரசு பள்ளி மாணவி தீயில் கருகி இறந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். இந்தப் பிரச்சினையில் தேசிய குழந்தைகள் நல ஆணையம் தலையிட்டு தீர்வுகாண வேண்டும். இறந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்நிலையில், மர்மமான முறையில் இறந்த சிறுமியின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE