கேரளாவை உலுக்கும் அரசியல் கொலைகள்

By காமதேனு

கேரளாவில் மீண்டும் அரசியல் படுகொலைகள் தலையெடுத்துள்ளன. நேற்று இரவும், இன்று(டிச.19) காலையுமாக அடுத்தடுத்து 2 படுகொலைகள் அரங்கேறி, அங்கே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

எஸ்டிபிஐ கட்சியின் கேரள மாநில செயலாளராக இருப்பவர் கே.எஸ்.ஷான். நேற்றிரவு ஆலப்புழா அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்த இவர் மீது கார் ஒன்று மோதி நிறுத்தியது. தொடர்ந்து காரில் வந்த மர்ம நபர்கள் ஷானை வெட்டி சாய்த்துவிட்டு மறைந்தனர். ஆலப்புழா மற்றும் கொச்சி மருத்துவமனைகளில் அடுத்தடுத்து சேர்க்கப்பட்ட ஷான் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு இறந்தார்.

பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில செயலாளராக இருப்பவர் ரஞ்சித் சீனிவாசன். இவர் இன்று அதிகாலை ஆலப்புழாவில் இருக்கும் தனது வீட்டிலிருந்து நடைபயிற்சி செல்வதற்காக தயாரானபோது, வீடுபுகுந்த மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார்.

10 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த இருவேறு கொலைகளும் ஆலப்புழா மட்டுமன்றி கேரளா மாநிலம் முழுக்க பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இருவேறு மதங்களின் பின்னணியில், எஸ்டிபிஐ மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இடையே தொடரும் அரசியல் கொலைகளால் மாநிலத்தில் அவ்வப்போது இயல்பு கெட்டு வருகிறது. ஒரு மாதமாக ஓய்ந்திருந்த இந்த கொலைகள், மதம் மற்றும் பழிவாங்கல் பின்னணியில் மீண்டும் தலையெடுத்துள்ளன.

தற்போதை படுகொலைகளை ஆலப்புழா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அரசு 144 தடை விதித்துள்ளது. ’கொடூரமும், மனிதாபிமானமும் அற்ற இந்த வன்முறைச் செயல்கள் மாநிலத்திற்கு ஆபத்தானவை’ என்று கண்டனம் தெரிவித்திருக்கும் மாநில முதல்வர் பினராயி விஜயன், கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE