நடிகைகளை பகடையாக்கிய சுகேஷ்!

By எஸ்.எஸ்.லெனின்

அமித் ஷா மீது சுகேஷ் சந்திரசேகருக்கு அப்படியென்ன கோபம் அல்லது அபிமானம் என்று தெரியவில்லை. தனது மோசடிகளுக்கு உள்துறை அமைச்சரான அவரது பெயரையும், அவரது அலுவலகத் தொடர்புகளையும் அநியாயத்துக்குப் பயன்படுத்தியதில் இப்போது திஹார் சிறையில் புழுங்குகிறான் சுகேஷ்.

சிறைப் பறவை சுகேஷ்

திஹார் என்பது மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருக்கு புதிய இடமல்ல. அவரைப் பொறுத்தவரை சிறைகள் பலதும் வேடந்தாங்கல் போல. ஒரு சிறைப் பறவையாக அவ்வப்போது வந்து ஓய்வெடுத்துச் செல்வான். பணமோசடி விவகாரங்கள் பலவற்றையும் சிறைகளின் கம்பிகளுக்குள் இருந்தவாறே, செல்போன் அழைப்புகள் வாயிலாகவே முடித்திருக்கிறான். 15 நிமிட அலைபேசி அழைப்பில் அப்படி அண்மையில் சுருட்டிய தொகை ரூ.215 கோடி. ஆனால், அதில் அமித் ஷா பெயரையும் அவரது அலுவலகத்தையும் அதிகமாகப் பயன்படுத்தியதில், இனி நிரந்தரமாகவே ஜெயில்தானோ என்று அஞ்சும் அளவுக்கு சுகேஷை வழக்குகள் ஒருசேர நெருக்கி வருகின்றன.

இரட்டை இலைக்கான இடைத் தரகர்

சுகேஷ் சந்திரசேகர் என்ற பெயர் தமிழக அரசியல்வாதிகள் பலருக்கும் மிகவும் பரிச்சயமானது. பல விஐபிக்களுக்கு தனது டெல்லி தொடர்புகளை வைத்து நாலாவித காரியங்களையும் முடித்து தரும் இடைத்தரகராக இருந்தான். இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக, டிடிவி தினகரனுடன் டெல்லியில் முகாமிட்டு, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு பல கோடிகள் லஞ்சம் கொடுக்க முயன்றபோது வசமாக சிக்கினான் சுகேஷ். அப்போதுதான், சுகேஷின் சென்னை தொடர்புகள் வெளியுலகுக்கு தெரியவந்தன. சென்னையில் கடல்பார்த்த பெரிய வீடு. அதில் விலையுயர்ந்த 16 கார்கள், டெல்லியிலிருந்து சென்னை வந்து செல்ல தனி விமானம் என சென்னையை மையமாக்கி சுகபோக வாழ்க்கை வாழ்ந்திருக்கிறான் சுகேஷ்.

பெங்களூரு காலத்து சுகேஷ்

பலம் - பலவீனம்

பெங்களூருவில் பிறந்த சுகேஷ் படித்தது என்னவோ பிளஸ் 2 மட்டுமே. ஆனால், ஆங்கிலத்தில் உரையாடுவதிலும், நவீன தொழில்நுட்பங்களைக் கையாள்வதிலும் கில்லாடி. முக்கியஸ்தர்கள் சிலருக்கு எடுபிடியாக இருந்து தனக்கான மோசடித் தொழிலின் அடிப்படைகளைக் கற்ற சுகேஷ், முதல் போணியாக பெங்களூரு தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.1.5 கோடியை அபகரித்தபோது சுகேஷுக்கு வயது 19 மட்டுமே. நைச்சியமாகப் பேசுவதும், பழகுவதும், எதிராளியின் பலவீனங்களைக் கண்டுணர்ந்து அதற்கேற்ப காய் நகர்த்துவதும் சுகேஷின் தனி பாணி. மோசடி செய்து கோடிகளில் அபகரித்ததை, சொகுசு வாழ்க்கையில் தண்ணீராக செலவழிப்பது சுகேஷின் ஹாபி. பழகும் நபரின் பலவீனம் பார்த்து சாய்க்கும் சுகேஷுக்கும் ஒரு பலவீனம் உண்டு. அது சினிமா நடிகைகள்.

பண மோசடிகளின் தூண்டில்

சினிமா நடிகைகளை குறிவைத்து சாய்ப்பதில் சுகேஷுக்கு அலாதியான ஆர்வம் உண்டு. பணமோசடி செய்து தேற்றிய கோடிகளை எல்லாம் தனக்குப் பிடித்த நடிகைகளுக்காக அள்ளி இறைப்பது சுகேஷின் வழக்கம். சுகேஷின் பிரதான கூட்டாளியும் மனைவியுமான லீனா பால் விழுந்தது கூட இப்படித்தான். பாலிவுட் வரை பல பிரபல நடிகைகளை வளைக்கும் சுகேஷ், தனது அடுத்தகட்ட பண மோசடிகளுக்கு தூண்டிலாகவும் அவர்களைப் பயன்படுத்தினான். இப்படிப் பழகியதும், ஏமாற்றியதுமான நடிகைகள் பட்டியல் நீளமானது. ஆனால், கரோனா காலத்தில் இந்தி நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸை வளைப்பதற்காக அமித் ஷா பெயரை பயன்படுத்தியது சுகேஷை சரித்துவிட்டது.

நடிகைகள் ஜாக்குலின் மற்றும் ஃபதேஹி

சன் டிவி முதல் ஜெயலலிதா வரை

ஜாக்குலினிடம் தன்னை உள்துறை அமைச்சக அதிகாரியாக அறிமுகப்படுத்திக்கொண்ட சுகேஷ், அவருடான அலைபேசி உரையாடலில், ’மேலிடத்துக்கு வேண்டப்பட்ட ஷேகர் ரத்ன வேலா என்ற தென்னிந்திய தயாரிப்பாளரைச் சந்திக்கவும்’ என்றதோடு முடித்துக்கொண்டான். அது அமித் ஷா அலுவலக எண் தானா என்று ஜாக்குலின் தரப்பில் உறுதி செய்ததில் அதிர்ந்தார்கள். அதன் பின்னர் சன் டிவி உரிமையாளர், ஜெயலலிதாவுக்கு உறவினர் என்றெல்லாம் சுகேஷ் சொன்னதை ஜாக்குலின் நம்ப வேண்டியதாயிற்று. அவரை மேலும் யோசிக்க விடாதபடி, உள்ளாடைகள் முதல் வைர ஆபரணங்கள் வரை பரிசுகளால் மூழ்கடித்தான் சுகேஷ். ஒரு கைதியாக காலம் கழிக்கும் சுகேஷுக்கு, இந்தச் செலவுகளுக்கெல்லாம் ஏது பணம் என்ற கேள்விக்கான பதிலும் அவரது ஜெயில் வாசத்தில் முடிகிறது.

கோடிகளில் மட்டுமே மோசடி

டெல்லி சிறைகளில் இருந்தபோது, ஜெயில் அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்து தனது சிறைவாசத்தை பாதுகாப்பான பணம் பறிக்கும் தலமாக பராமரித்த சுகேஷ், அங்கிருந்தபடி, ரான்பாக்சி நிறுவனரான ஷிவிந்தர் சிங்கை சிறையிலிருந்து விடுவிக்க, அவரது மனைவி அதிதி சிங்கிடம் முக்கிய அரசியல்வாதிகளின் பெயரில் பல நூறு கோடிகளில் பேரம் பேசினான். இதையெல்லாம் 2 ஐபோன்கள், தனது கிரிமினல் வேலைகளுக்கு அடிப்படையான செயலிகள் ஆகியவற்றைக் கொண்டே சாதித்திருக்கிறான்.

குரலை மாற்றிப் பேசுவது முதல், அரசியல் விஐபிக்களின் பிரத்யேக எண்ணிலிருந்து அழைப்பதுபோல தொழில்நுட்பத்தில் சதாய்ப்பதுவரை செல்போன் செயலிகள் அவனுக்கு உதவும். நைச்சியமாய்ப் பேசி சாதிப்பது மட்டுமே சுகேஷ் வேலை. பேரத்தில் படியும் ஹவலா பெருந்தொகையைப் பெறுவதும், அவற்றை சுகேஷ் கைகாட்டும் இடங்களில் முடக்குவதும் அவனது அடிப்பொடிகளின் பணி. கோடிகளுக்கு குறைவாகத் தனது மோசடிகளை தீர்மானிப்பதில்லை என்பது சுகேஷின் கொள்ளை கொள்கைகளில் ஒன்று.

சுகேஷ் சந்திரசேகர்

அமுக்கிய அமலாக்கத் துறை

அமித் ஷா பெயரையும், அவரது அலுவலக எண்களையும் சுகேஷ் அதிகம் பயன்படுத்தியது, ஒரு கட்டத்தில் உள்துறை அமைச்சக அதிகாரிகள் சிலருக்கு உறுத்தியது. சுகேஷிடம் ஏமாந்தவர்கள் வாயிலாக அவனது அலைபேசி எண்களை ஆராய்ந்தனர். அவற்றை ஒட்டுக்கேட்கவும் ஆரம்பித்தார்கள். அப்படித்தான் சுகேஷின் சிறைவாசத்தை நிரந்தரமாக்கியதோடு, அவனது கூட்டாளிகள் என ஜாக்குலின் போன்ற நடிகைகளையும் அமலாக்கத் துறை வளைத்தது. பதறிப்போன அவர்கள், நாங்கள் கூட்டாளிகள் அல்ல; சுகேஷால் பாதிக்கப்பட்டவர்களே என்பதை நிரூபிக்கப் போராடி வருகிறார்கள்.

இணையத்தில் பரவிய சில புகைப்படங்களால் ஜாக்குலின், நோரா ஃபேதி உள்ளிட்ட சில நடிகைகள் மட்டுமே அம்பலமாகி உள்ளனர். ஆனால், சுகேஷ் அனுப்பிய பரிசுகளில் மஞ்சள் குளித்த பட்டியலில் பல முன்னணி நடிகைகளும் இருக்கிறார்கள். சுகேஷுக்கு எதிராக 7 ஆயிரம் பக்கங்களில் அமலாக்கத் துறை தாக்கல் செய்திருக்கும் குற்றப் பத்திரிகையில், இவை உட்பட ஏராளமான விவரங்கள் உள்ளன.

சுகேஷின் முந்தைய சிறை தகிடுதத்தங்கள் அம்பலமானதில், தற்போதைய திஹார் சிறைவாசத்தில் கெடுபிடிகளும் கண்காணிப்புகளும் அதிகரித்திருக்கின்றன. ஆனால், சிறையில் தான் மன அழுத்தத்துக்கு ஆளாக்கப்படுவதாகவும், மூச்சு விடமுடியாதபடி நெருக்கடிகள் அதிகரிப்பதாகவும், அண்மை வழக்கு விசாரணையின் போது நீதிபதியிடம் அழுதிருக்கிறான் சுகேஷ். அவனது மோசடி நாடகங்களில் இதுவும் ஒன்றா அல்லது நிஜமாகவே சுகேஷின் ரகசியங்களை சிறைக்குள்ளாக முடிக்க சதிகள் நடக்கிறதா என்பதும் அந்த ரகசியங்களில் ஒன்றாகவே நீடிக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE