மகள் ஷீனா போரா உயிரோடு இருக்கிறார்

By காமதேனு

மகள் ஷீனா போராவை கொன்றதாக சிறையிலிருக்கும் இந்திராணி , தன் மீதான வழக்கின் அடிப்படையை தகர்க்கும் வகையில் புதிய கதையை கிளப்பி உள்ளார்.

இந்திராணி முகர்ஜி 2015 முதல் மும்பை பைகுலா சிறையில் கழித்து வருகிறார். 2012ல் தனது 24 வயது மகள் ஷீனாவை கொன்ற வழக்கில், சிபிஐ விசாரணை முடிவடைந்த நிலையில் புதிய பூதத்தை கிளப்பி இருக்கிறார் இந்திராணி.

இந்திராணிக்கு அடுத்தடுத்து 3 கணவர்கள். முதல் கணவர் சித்தார்த்தாவுக்கும் இந்திராணிக்கும் பிறந்த 2 வாரிசுகளில் ஒருவர் மகள் ஷீனா போரா. இந்திராணியின் பெற்றோர் வளர்ப்பிலிருந்த ஷீனா போராவை வெளியுலகத்தில் தனது தங்கையாக அறிமுகம் செய்து வைத்திருந்தார். சித்தார்த்தாவுக்கு அடுத்தபடியாக சஞ்சீவ் கண்ணா என்பவரை மணந்தார் இந்திராணி. இருவருக்கும் ஒரு மகன் உண்டு. பின்னர் இவரையும் விவாகரத்து செய்துவிட்டு ஊடக அதிபர் பீட்டர் முகர்ஜியை மணந்து இந்திராணி முகர்ஜியானார். பீட்டருக்கு அவரது மனைவி வாயிலாக ராகுல் முகர்ஜி என்ற மகன் உண்டு.

இந்திராணி முகர்ஜி மற்றும் மகள் ஷீனா போரா

மகள் ஷீனா போராவை தனது தங்கை என்றே பீட்டர் குடும்பத்துக்கு அறிமுகம் செய்திருந்தார் இந்திராணி. ஷீனாவுக்கும், ராகுல் முகர்ஜிக்கும் எங்கோ எப்படியோ பற்றிக்கொள்ள, விஷயமறிந்து இந்திராணி துடித்துப்போனார். ராகுல் முகர்ஜியுடனான காதலை கைவிடுமாறு ஷீனா போராவை மிரட்டிப்பார்த்தார். பதிலுக்கு இந்திராவின் தனிப்பட்ட ரகசியங்களை பீட்டரிடம் சொல்லப்போவதாக ஷீனா சாதித்தார்.

கடைசியில் 2012ல் மும்பை ராஜ்காட் பகுதியில் காரில் வைத்து, தனது கார் ஓட்டுநர் மற்றும் இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னாவுடன் சேர்ந்து ஷீனாவை கழுத்தை நெறித்து கொன்று, சடலத்தை எரித்தார். ஷீனாவை தேடி விசாரித்த ராகுலிடம், அவள் அமெரிக்கா சென்று விட்டதாக இந்திராணி சாதித்தார். ஷீனாவின் பாஸ்போர்ட் ராகுல் கையில் இருந்ததால், அவர் போலீஸாரிடம் புகாரளித்தார். ஆனால் இந்திராணியின் பெரிய இடத்து தொடர்புகள் காரணமாக, அவரை போலீஸாரால் நெருக்க முடியவில்லை.

சிறையில் இந்திராணி

ஷீனா கொல்லப்பட்டு 3 வருடங்களுக்குப் பின்னர், இந்திராணியின் கார் ஓட்டுநர் ஷ்யாம், வேறொரு வழக்கில் போலீஸிடம் சிக்கியபோது ஷீனா போரா கொலை விவகாரமும் வெளிப்பட்டது. இந்திராணி, அவரது இரண்டாவது கணவர் சஞ்சீவ், கார் ஓட்டுநர் ஷ்யாம், மூன்றாவது கணவர் பீட்டர் உள்ளிட்டோர் கைதானார்கள். 2019ல் பீட்டர், இந்திராணியை விவாகரத்து செய்ததுடன், அடுத்த ஆண்டே ஜாமீனில் வெளியே வந்தார். சஞ்சீவ் கண்ணா தனது உடல் உபாதைகளை நீதிமன்றத்தில் பட்டியலிட்டு ஜாமீன் கோரி வருகிறார். சிறையில் அடைபட்டிருக்கும் இந்திராணி திடீரென தனது நீண்ட கால மௌனத்தை கலைத்திருக்கிறார்.

சிபிஐ இயக்குநருக்கு தற்போது அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், ஷீனா போரா சாகவில்லை என்றும், அவர் காஷ்மீரில் பத்திரமாக இருப்பதாகவும் ஆரம்பித்து பல தரவுகளை அதில் விளக்கி உள்ளார். இந்திராணியை சிறையில் சந்தித்த ஒரு பெண்மணி இந்த புதிய விபரங்களை அளித்ததாக இந்திராணியின் கடிதம் நீள்கிறது. இந்திராணியின் கடித்தத்துக்கு, அவரது வழக்கினை விசாரித்த போலீஸார் முதல் சிபிஐ வரை எவரும் இன்னமும் பதில் வினையாற்றவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE