கேரள சுகுமார குரூப் பாணியில் இன்னொரு சம்பவம்

By காமதேனு

கொலைவழக்கில் கைதாகி சிறையிலிருந்த நபர், பரோலில் வெளிவந்தபோது, மீண்டும் சிறைக்குத் திரும்புவதைத் தவிர்க்க 2-வது கொலையை அரங்கேற்றி சிக்கியிருக்கிறார்.

காஸியாபாத் போலீஸார் இன்னமும் வியப்பிலிருந்து விடுபடவில்லை. இப்படியும் நடக்குமா என்ற சாமானிய ஆச்சரியத்தில் அவர்களும் ஆழ்ந்திருக்கிறார்கள். சுதேஷ் என்ற நபர் நடத்திய கொலை நாடகம், காஸியாபாத் போலீஸாரை அந்த அளவுக்கு அலைக்கழித்து மீட்டிருக்கிறது.

நவ.20 காஸியாபாத்தின் லோனி ஏரியா பகுதியில் முகம் எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சடலத்தின் உடைமைகளை சோதித்ததில், கிடைத்த ஆதார் அட்டையை வைத்து இறந்தவர் சுதேஷ் என்ற முடிவுக்கு வந்தனர். அண்மையில் சிறையிலிருந்து பரோலில் வெளிவந்த நபர் என்றும் உறுதி செய்தனர். சுதேஷின் மனைவி அனுபமாவை அழைத்துவந்து காட்டியபோது, அவரும் விழுந்து புரண்டு அழுது, கணவர் சுதேஷின் சடலம்தான் இது என்று சாட்சியம் அளித்தார்.

அத்தோடு முடிந்திருக்க வேண்டிய வழக்கு, காஸியாபாத் போலீஸ் அதிகாரிகள் சிலரின் ஐயம் காரணமாக, வேறு கோணத்தில் பயணிக்க ஆரம்பித்தது. சுதேஷ் மனைவியின் எதிர்வினைகளில் ஏதோ நெருடல் இருப்பதாகவும், அப்பெண்ணை உளவு பார்க்கும்படியும் உத்தரவானது. அதாவது, அனுபமா திட்டமிட்டு தனது கணவரை கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரிக்க ஆரம்பித்தனர்.

அப்படி, சுதேஷின் வீடு அமைந்திருந்த தெருவின் சில சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தபோது, யாருமறியாத வேளையில் ஆண் ஒருவர் சுதேஷின் மனைவியை ரகசியமாக சந்தித்துச் செல்வதும், அந்த நபர் சுதேஷ் போலவே இருப்பதையும் அறிந்தனர். வீட்டருகே பதுங்கியிருந்து அந்த நபரைப் பிடித்தனர். விசாரணையில் சுதேஷ் உருவத் தோற்றத்திலிருந்த அந்த நபர்தான், உண்மையான சுதேஷ் எனத் தெரியவந்தது.

3 ஆண்டுகளுக்கு முன்னர் தனது 13 வயது மகளைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுதேஷுக்கு, கரோனா பரவல் காரணமாக பரோல் கிடைத்தது. கொலைவழக்கு கைதி சுதேஷ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி, தீர்ப்புக்கான நாளும் நெருங்கியிருந்தது. பரோல் முடிந்து சிறைக்கு திரும்பினால், தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்பதை உணர்ந்த சுதேஷ், வேறு திட்டம் போட்டார். அன்றாட பணிக்குச் செல்லும் தொழிலாளர்களில் தன் உடல்வாகுள்ள ரவிதாஸ் என்பவரை வீட்டுக்கு அழைத்து, மது அருந்தும் அளவுக்கு நெருக்கமானார். பின்னர் ஒருநாள் உச்ச போதையிலிருந்த ரவிதாஸை கட்டையால் தாக்கிக் கொன்றதுடன், முகத்தையும் எரித்துச் சிதைத்தார். அந்தச் சடலத்தைத் தன்னுடையது என்று சித்தரித்து, சிறைக்குத் திரும்புவதிலிருந்தும் தப்பிக்க முயன்றார்.

தற்போது சுதேஷூம் அவருக்கு உடந்தையாக இருந்த மனைவியும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்திவரும் போலீஸார், சுதேஷின் முதல் கொலை பின்னணி குறித்தும் மீண்டும் ஒருமுறை விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலான கதையில், அண்மையில் வெளியான திரைப்படம் ‘குரூப்’. ‘சுகுமார குரூப்’ என்ற நபர், தனது பெயரிலான இன்சூரன்ஸ் முதிர்வுத் தொகையை தான் உயிரோடு இருக்கும்போதே அனுபவிக்க ஆசைப்பட்டார். இதற்காக தன்னைப் போலவே உருவ ஒற்றுமை உடைய அப்பாவியை கொன்று நாடகமாடினார். 37 வருடங்களாகியும் தீர்க்கப்படாத வழக்காக கேரளாவில் நீடிக்கும் மர்மமே, குரூப் திரைப்படமாகவும் வெளியானது.

இதே சுகுமார குரூப் பாணியில் காஸியாபாத் சுதேஷும், அப்பாவியைக் கொன்று தான் இறந்ததாக நாடகமாடித் தப்பிக்க முயன்றிருக்கிறார். சிசிடிவி போன்ற நவீன சாட்சியங்கள் இல்லாவிட்டால் சுகுமார போல, சுதேஷும் தப்பித்திருக்கக் கூடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE