திருப்பூர்: திருப்பூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கேரளாவை சேர்ந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்கும் வகையில், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இந்த ஆய்வின் போது குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அதனை விற்பனை செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் லட்சுமி நகர் மில்லர் ஸ்டாப் அருகில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் இன்று காலை விஜயலலிதாம்பிகை மற்றும் ஆய்வாளர் தங்கவேல் உள்ளிட்ட அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்தப் பகுதியில் ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட கூல் லிப் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கேரளாவை சேர்ந்த முகமது பர்கான் (23) என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்து 5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபோல் அதிகாரிகள் தென்னம்பாளையம், மும்மூர்த்தி நகர், முருகம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, புகையிலை விற்பனை செய்த மேலும் 4 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 5 கடைகளுக்கு தலா 25 ஆயிரம் வீதம் ரூ.1.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
» போடி காவல் நிலையத்தில் மூன்று பேருக்கு கத்தி குத்து: இருவர் கைது
» ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல்: சென்னையில் இந்தோனேசிய இளைஞர் கைது