காதலன் மீது ‘பிக் பாஸ்’ ஜூலி புகார்

By ரஜினி

சென்னை, பரங்கிமலை ஐரோப்பியன் லேன் பகுதியைச் சேர்ந்தவர் மரியா ஜூலியானா(26). செவிலியர் படிப்பு முடித்த ஜூலி, தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமடைந்த இவர், தற்பொழுது தனியார் டிவி சேனலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் ஜூலிக்கு அமைந்தகரை அய்யாவு காலனி பகுதியைச் சேர்ந்த மனிஷ்(26) என்பவருடன் நட்பு ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியது. இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வருகின்றனர்.

மனிஷ், அண்ணா நகர் 2-வது அவென்யூவில் உள்ள தனியார் சலூன் கடையில் பணியாற்றி வருகிறார். இருவரும் நெருக்கமாகப் பழகிவந்த நிலையில், மனிஷ் ஜூலியை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவாரத்தை கூறி நம்ப வைத்துள்ளார். இதை நம்பிய ஜூலி, மனிஷுக்கு இருசக்கர வாகனம், 2 பவுன் தங்க செயின், பிரிட்ஜ் என ரூ.2.30 லட்சம் வரை செலவு செய்துள்ளார்.

ஜூலி

இந்நிலையில் மனிஷ், திடீரென மதத்தைக் காரணம்காட்டி பெற்றோர்கள் தங்கள் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறி, ஜூலியுடனான காதலை முறித்துக் கொண்டார். இருப்பினும் மனிஷ், தொடர்ந்து ஜூலியிடம் பணம் கேட்டு தொல்லை கொடுப்பதுடன் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த ஜூலி, தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிப் பணம் பறித்த மனிஷ் மீது நடவடிக்கை கோரி அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், மனிஷிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE