இணையத்தில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள்: சிபிஐ விசாரணை

By ரஜினி

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவில் குழந்தைகளை வைத்து ஆபாசப் படங்கள் எடுப்பது மட்டுமல்லாமல் அதைப் பார்ப்பது, பகிர்வது, வைத்திருப்பது குற்றம் என சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு டெல்லியில், குழந்தைகளை வைத்து ஆபாசப் படம் எடுத்து அதைப் பதிவேற்றியதாக ஒரு கும்பலை டெல்லி போலீஸார் கைது செய்தனர். அதேபோல், சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இதுதொடர்பாக 12-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு என்ற தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு, இதுதொடர்புள்ள ஐ.பி முகவரிகள் பட்டியலிடப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தமிழக காவல் துறை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் இந்தவகை படமெடுக்கும் மாஃபியா கும்பல்கள் இந்தியாவில் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளிலிருந்தும் செயல்பட்டு வந்தது தெரியவந்ததை அடுத்து, இவ்விவகாரம் சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. சிபிஐ அதிகாரிகள், இது தொடர்பாக தனித்தனியே 23 வழக்குகளைப் பதிவுசெய்து, சந்தேகத்தின் அடிப்படையில் டெல்லி, பிஹார், பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தமிழ்நாடு, ஹரியாணா, ராஜஸ்தான், ஒடிசா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 14 மாநிலங்களைச் சேர்ந்த 83 பேரை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தது. அதில் 31 பேர் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றது.

மேலும், இது தொடர்பாக கிடைத்த பல்வேறு தகவல்களின் அடிப்படையில், குழந்தைகளின் படங்களைப் பகிர வாட்ஸ்அப் குழு ஒன்று இயங்கி வந்தது தெரியவந்தது. இக்குழுவில் குழந்தைகளின் படங்களைப் பகிரும் எண்ணை ட்ராக் செய்து, தமிழகத்தில் 6 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 77 இடங்களில் சிபிஐ அதிகாரிகள், இன்று(நவ.16) சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக தமிழகத்தில் திருவள்ளூர், சேலம், திருப்பூர், திண்டுக்கல், திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சோதனையில் கைப்பற்றப்பட்ட லேப்டாப் மற்றும் செல்போன்களை ஆய்வு செய்ததில், 50-க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குழுக்கள் இதேபோல் செயல்பட்டு வருவதும், இதில் 5,000 பேருக்கு மேல் தொடர்பு இருப்பதும், பல குழுக்களில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் 100 நாடுகளைச் சேர்ந்த நபர்களுக்கு தொடர்பு இருப்பதால், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE