காரைக்குடியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அழகு நிலைய (பியூட்டி பார்லர்) மேலாளர் லெட்சுமி உள்ளிட்ட இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைக்குடியில், அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் பயிலும் ஒரு மாணவியின் பள்ளித் தோழியின் அம்மாதான் இந்த லெட்சுமி. இவர், காரைக்குடி வருமானவரி அலுவலகம் அருகே உள்ள ஒரு அழகு நிலையத்தில் மேலாளராக இருக்கிறார். இவர், தனது மகள் மூலம் அவளது தோழியான பள்ளி மாணவியை, அழகு நிலையத்துக்கு அழைத்துவர வைத்திருக்கிறார்.
அழகு நிலையத்துக்கு வந்த அந்த மாணவிக்கு, அழகு நிலையத்தின் உரிமையாளரான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மன்ஸில், பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக, அந்த மாணவியின் தந்தை காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து மன்ஸில், அவருக்கு உடந்தையாக இருந்ததாக தேவகோட்டையைச் சேர்ந்த விக்னேஷ், அழகு நிலைய மேலாளர் லெட்சுமி, லெட்சுமியின் மகள் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. தொடர் விசாரணையில் லெட்சுமி, விக்னேஷ் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். தலைமறைவாகிவிட்ட மன்ஸிலை போலீஸார் தேடி வருகிறார்கள்.
அழகு நிலையத்தில் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், காரைக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.