கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பெயர் பலகைகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள்: போலீஸார் விசாரணை

By க. ரமேஷ்

கடலூர்: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெயர் பலகை, ஜீப் ஆகியவற்றை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அறை, மாவட்ட வருவாய் அலுவலர் அறை உள்ளது. இந்த அறைகளுக்கு வெளிப்புறத்தில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் பெயர் பலகை இருந்தது. இந்தநிலையில் இன்று (ஜூன்.9) காலை மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் பெயர் பலகைகள் உடைந்து சேதமடைந்த நிலையில் இருந்தன. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அரசு ஜீப் கண்ணாடி உடைந்த நிலையில் இருந்தது. இதனை பார்த்த அரசு அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர். அ.அருண் தம்புராஜூக்கு தகவல் அளித்தனர். மேலும் கடலூர் புதுநகர் போலீஸாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராவையும் போலீஸார் தீவிர ஆய்வு செய்து வருகின்றனர்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பெயர் பலகைகள் மற்றும் ஜீப் கண்ணாடி உடைத்த மர்ம நபர்கள் யார்? என தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE