சென்னையில் பதுங்கியிருந்த ஜார்க்கண்ட் மாவோயிஸ்ட் கைது

By காமதேனு டீம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசாரிபாக் மாவட்டம், கேராதாரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுக்கர்கஞ்சு (31). இவர் ’ஜார்க்கண்ட் மாவோயிஸ்ட் தீபக் காம்ரேட்’ அணியைச் சேர்ந்தவர். மாவோயிஸ்ட் சுக்கர் மீது ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 2 கொலை, 3 கொலை முயற்சி, வெடிகுண்டு வீசிய வழக்கு உட்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் சுக்கர் தலைமறைவானார். அதை அடுத்து, கடந்த சில மாதங்களாக ஜார்க்கண்ட் போலீஸார் அவரை தீவிரமாக தேடிவந்தனர். சுக்கர் தலைமறைவானதால், ஜார்க்கண்ட் போலீசார் அவரது குடும்பத்தினரைக் கண்காணித்து வந்ததுடன் அவர்களது செல்போன் எண்ணையும் டிராக் செய்து வந்தனர்.

இந்நிலையில், சுக்கர் நேற்று முன்தினம் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். இதைக் கண்டுபிடித்த ஜார்க்கண்ட் போலீஸார், அவரது செல்போன் எண்ணின் டவர் லொக்கேஷனை ஆய்வு செய்தபோது அது சென்னை எண்ணூர் பகுதியைக் காண்பித்தது.

உடனே உஷாரான ஜார்க்கண்ட் போலீஸார், இதுகுறித்து சென்னை காவல் ஆணையருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், காவல் ஆணையர் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் தலைமையிலான போலீஸார், எண்ணூர் அனல் மின்நிலையம் அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்ட் சுக்கர்கஞ்சுவை போலீஸார் கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தலைமறைவான மாவோயிஸ்ட் சுக்கர், கடந்த 9 மாதங்களாக இங்கு தங்கி, ஒப்பந்ததாரர் சுரேஷ் என்பவரிடம் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. கடந்த சில மாதங்களாக யாரையும் தொடர்புகொள்ளாமல் இருந்த சுக்கர், நேற்று முன்தினம் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டபோது போலீஸில் சிக்கினார். பின்னர், சுக்கர்கஞ்சுவை போலீஸார் கைது செய்தது குறித்து, ஜார்க்கண்ட் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE