தேர்தலில் மனைவியை எதிர்த்துப் போட்டியிட்டவர்களுக்கு ரவுடி கொலை மிரட்டல்!

By ரஜினி

தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சூர்யா (34). இவர் மீது பீர்க்கன்காரணை, ஓட்டேரி, சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை,கொலை முயற்சி உட்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவருக்கு விஜயலட்சுமி (32) என்ற மனைவியும், கோகுல், யுவஸ்ஸ்ரீ என 2 குழந்தைகளும் உள்ளனர். ரவுடி சூர்யா, குற்றவழக்கு ஒன்றில் கைதாகி தற்போது சிறையில் உள்ளார். நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெடுங்குன்றம் ஊராட்சியில் 9-வது வார்டு உறுப்பினராக விஜயலட்சுமி சுயேட்சையாக போட்டியிட்டு வார்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று தமிழகம் முழுதும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, நெடுங்குன்றம் பகுதியில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் விஜயலட்சுமி கலந்துகொண்டு வார்டு உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார்.

பதவியேற்றுக் கொண்டு மேடையிலிருந்து இறங்கி வந்த விஜயலட்சுமியை, ஓட்டேரி காவல் நிலைய போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பிறகு விசாரணைக்காக அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு கூடியிருந்த விஜயலட்சுமியின் ஆதரவாளர்கள் காவல் துறையினரைச் சூழ்ந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதுகுறித்துக் காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ”சரித்திர பதிவேட்டுக் குற்றவாளியான நெடுங்குன்றம் சூர்யா தனது மனைவியை ஊராட்சி வார்டு உறுப்பினராகப் போட்டியிட வைத்ததுடன், அவரை எதிர்த்து போட்டியிடக்கூடாது என சிறையிலிருந்து மிரட்டியதால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. மேலும் தனது மனைவிக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிகேட்டு அரசியல் பிரமுகர்களை மிரட்டி நெருக்கடி கொடுத்ததால், அவருக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவி வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இது மட்டுமின்றி ரவுடியின் மனைவி விஜயலட்சுமி கஞ்சா கடத்தி விற்பனை செய்து வந்ததாகப் புகார்கள் வந்ததை அடுத்து அவர் மீது வழக்குப் பதிவுசெய்து கைது செய்துள்ளோம்”.

இவ்வாறு காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE