‘யோகா’ கின்னஸ் சாதனையாளர் பாலியல் வன்புணர்வு வழக்கில் கைது

By ரஜினி

பிரபல யோகா பயிற்சி ஆசிரியர் யோகராஜ் என்றழைக்கப்படும் பூவேந்திரன் சிதம்பரம். இவர், கடந்த 2015-ல் ஹாங்காங்கில் நடைபெற்ற யோகா போட்டியில் தொடர்ந்து 40 மணிநேரம் யோகா பயிற்சி மேற்கொண்டு கின்னஸ் சாதனை படைத்தார். இதையடுத்து, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இவரது கின்னஸ் சாதனையை பாராட்டிப் பதிவிட்டார்.

இந்நிலையில், மருத்துவத் துறையில் பணியாற்றி வரும் சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர், தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் யோகராஜ் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், யோகா பயிற்சி ஆசிரியர் யோகராஜ் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

யோகராஜிடம் யோகா கற்றுக்கொள்ளச் சென்றபோது, ’பார்ட்னர் யோகா’ என்ற பெயரில் தன் அந்தரங்கப் பகுதிகளில் தொட்டு பாலியல் தொந்தரவு செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தன்னை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, பேசிப் பழகி வந்ததாகவும், தனது பிறந்தநாளில் வீட்டுக்கு அழைத்துவந்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு தன்னை தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

தன்னிடம் மட்டுமல்லாது பல பெண்களிடம் இதுபோன்று தவறாக நடந்து கொண்டதாகப் பாதிக்கப்பட்ட பெண், புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான ஆடியோ மற்றும் வீடியோ வாட்ஸப் சாட் ஆதாரங்களை போலீசாரிடம் அளித்ததாக தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரை அடிப்படையாக வைத்து, மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் யோகராஜிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. அடுத்து யோகராஜ் மீது பாலியல் பலாத்காரம் செய்தல், மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் பல பெண்களிடம் யோகா பயிற்சி அளிப்பதாகக் கூறி யோகராஜ் மோசடி செய்திருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியிருப்பதால், அவரை காவலில் வைத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாகப் பேட்டியளித்த தனியார் தொண்டு நிறுவன நிர்வாகி ஷியாம், ”யோகராஜ் மீது ஹாங்காங், மும்பை உள்ளிட்ட இடங்களில் கற்பழிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை, யோகா பயிற்சி அளிக்கும் பெயரில் பாலியல் தொல்லை கொடுத்து அவற்றை வீடியோவாக படமெடுத்து, சீனாவில் பாலியல் வலைதளங்களுக்கு விற்பனை செய்துள்ளார். மேலும் யோகராஜுக்கு உடந்தையாக ஹாங்காங்கில் பெண் ஒருவர் செயல்பட்டுவருகிறார். அந்தப் பெண் யோகராஜிடமிருந்து பாலியல் வீடியோக்களை பெற்றுக்கொண்டு பணம் அனுப்பி வந்தார். இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் பயமின்றி புகாரளிக்க முன்வந்தால், அவர்களுக்கு உதவ தயாராக உள்ளோம்” என்று கூறினார்.

சமூகத்தில் தங்களுக்குக் கிடைக்கும் அந்தஸ்தை வைத்துக் கொண்டு, பெண்களிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுவரும் இத்தகையவர்கள் அபாயகரமானவர்கள். அதிலும் சீன பாலியல் வலைதளங்களுக்கு தன்னுடைய வக்கிரத்தை வீடியோவாக விற்றிருக்கிறார் என்றால், இவருக்குப் பின்னால் வலைப்பின்னலாகப் பலர் இருக்கக்கூடும் என்கிற அச்சமும் சந்தேகமும் எழுகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக முன்வந்து காவல் துறையிடம் புகார் அளித்தால் மட்டுமே, இத்தகைய கயவர்களை தண்டிக்க முடியும். மேலும் இத்தகைய குற்றங்கள் நிகழ்வதை தடுத்து நிறுத்த முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE