டூயட் பாட உதவும் பிரபல செயலி வழி மோசடி!

By காமதேனு டீம்

பிரபலமான மெட்டுகளுக்கு ரசிகர்கள் பாட வழி செய்து தருகிறது இசை சமூக ஊடகமான ’ஸ்மூல்’ செயலி. இதில் பதிவேற்றும் ஒலிப்பதிவைப் பலவிதங்களில் பகிர்ந்து கொள்ள முடியும்.

இத்தகைய விதவிதமான பகிர்வுகள் பெரிய நட்பு வலையை உருவாக்க உதவுகின்றன. அந்த வகையில், ஸ்மூல் ஆப் மூலமாகக் கல்லூரி மாணவிகள் மற்றும் திருமணமான பெண்களைக் குறிவைத்து ஏமாற்றிய லோகேஷ் (38) கைது செய்யப்பட்டார்.

இதுவரை 15 பெண்களிடம் ரூ.10 லட்சம்வரை மோசடி செய்த லோகேஷிடமிருந்து 72.2 கிராம் தங்க நகைகள், 2 செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல்...

சென்னை, காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் கல்லூரி மாணவி ஒருவர் புகார் அளித்தார். அதில் ஸ்மூல் ஆப் மூலம் தனக்கு அறிமுகமான நபர், பின்னர் தனது தனிப்பட்ட விவரங்களை வாங்கி பழக ஆரம்பித்தார். பின்னர், தன்னைக் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி 17 ஆயிரம் பணம் மற்றும் 13.5 சவரன் தங்க நகைகளைப் பறித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகார் மனுவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார், தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மோசடியில் ஈடுபட்ட நபர் திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர்.

விசாரணையில், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உட்பட 15-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஸ்மூல் ஆப் மூலமாக டூயட் பாடி லோகேஷ் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது அம்பலமானது. அவர்களது முகநூல் கணக்கு, வாட்ஸ்அப் எண் ஆகியவற்றை லோகேஷ் சேகரித்துள்ளார். அதன் மூலமாக நட்பை வளர்த்துக் காதலிப்பதாகக் கூறி நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். பின்னர் தனக்கு அவசர உதவி தேவைப்படுகிறது, தனது பாட்டி இறந்துவிட்டடார், மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டியுள்ளது எனப் பல காரணங்களைக் கூறி பணம் பறித்து வந்துள்ளார்.

அவ்வாறு கேட்டுக் கொடுக்கவில்லை என்றால், அந்தப் பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாகச் சித்தரித்துப் பெற்றோரிடம் காண்பித்து விடுவதாக மிரட்டியும் பணம் பறித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட லோகேஷின் செல்போனை போலீஸார் ஆய்வு செய்ததில், அவர் ’நிஷாந்த்’ மற்றும் ’விமலேஷ்’ என்ற பொய்யான பெயர்களில் இயங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சென்னை, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களையும், புதுச்சேரி மற்றும் மலேசியா வாழ் பெண்களையும் ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி பணம் பறித்தது அம்பலமானது. கைது செய்யப்பட்ட லோகேஷ், பிளஸ் 2 முடித்துவிட்டு பி.ஏ. முதலாம் ஆண்டுடன் படிப்பை நிறுத்தியுள்ளார்.

அப்பா கூலி வேலையும், அம்மா வீட்டு வேலையும் செய்து வருகின்றனர். இந்நிலையில் பெண்களிடம் முதலில் சின்ன சின்ன உதவிகளுக்காகப் பணம் பெற்ற வந்த லோகேஷ், அவர்களிடம் இருந்து எளிதாக பணம் கிடைக்கவே அதையே தொழிலாக மாற்றிக்கொண்டார்.

அதிலும் நேரடியாகச் சென்று நகை, பணத்தைப் பெறும் வழக்கத்தை லோகேஷ் கொள்ளவில்லை. பணத்தை வங்கிகள் மூலமாகவும், நகைகளை கொரியர் மூலமாகவே பாதிக்கப்பட்ட பெண்கள் அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவரிடம் இருந்து 72.2 கிராம் தங்க நகைகள், 2 செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுவரை 15 பெண்களிடம் சுமார் ரூ.10 லட்சம்வரை மோசடி செய்த லோகேஷிடம் ஏமாந்தவர்கள் சைபர்கிரைம் போலீஸாரிடம் புகார் அளிக்கலாம் எனவும் சைபர்கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE