18 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம்; 48 வயது நபர் கைது

By காமதேனு டீம்

சென்னை, அண்ணா சாலை களிமண்புரம் பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுமி, செப்.17 அன்று தனது வீட்டிலிருந்து காணாமல் போனார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், சிறுமியின் தாயார் அண்ணா சாலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கடந்த 19-ம் தேதி புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து அப்பெண்ணைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், புதுப்பேட்டை மார்க்கெட் பகுதியில் சிறுமி இருப்பதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீஸார் சிறுமியை மீட்டு, காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமி புதுப்பேட்டை கொய்யா தோப்பு பகுதியைச் சேர்ந்த சிவராம்(48) என்பவரைத் திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது.

இதையடுத்து சிறுமியைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்டதாக, சிவராமைப் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE