வாடகை வீட்டில் கஞ்சா விற்பனை -இளைஞர் கைது!

By காமதேனு டீம்

சென்னை, செங்குன்றம் அடுத்து சோழவரம் பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார் (27). இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேகே நகர் விஜயராகவபுரத்தில் பாஸ்கர் (பெயர்மாற்றம்) என்பவருக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்குக் குடியேறினார்.

தான், கேகே நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக சரத்குமார் கூறியுள்ளார். சோழவரத்தில் இருந்து கேகே நகருக்கு வேலைக்கு வருவது சிரமமாக உள்ளதால், இங்கேயே வீடு வாடகைக்கு எடுத்துத் தங்க விரும்புவதாக வீட்டு உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சரத்குமார் குடியேறிய சில நாட்களில் அவரை தேடி சிறார், இளைஞர் என பலர் வந்த வண்ணம் இருந்தனர்.

இதனால் சந்தேகமடைந்த வீட்டு உரிமையாளர், இதுகுறித்து சரத்குமாரிடம் கேட்டிக்கிறார். தன்னுடன் வேலை செய்யும் ஊழியர்கள், நண்பர்கள் வந்து செல்வதாக சரத்குமார் பதிலளித்துள்ளார். இருப்பினும் உரிமையாளருக்குச் சந்தேகம் தீரவில்லை.

இந்நிலையில் நேற்று (செப்.19), வழக்கத்துக்கு மாறாக அதிகமான ஆண்கள் சரத்குமாரை தேடி வந்து சென்றுள்ளனர். இதனால் வீட்டு உரிமையாளருக்குச் சந்தேகம் வலுக்கவே, கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து நேற்று இரவு, கேகே நகர் போலீஸார் சரத்குமார் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து சரத்குமாரைக் கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், ஆந்திராவில் இருந்து தனது நண்பர்கள் மூலம் கஞ்சா வாங்கி வந்து கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு விற்பனை செய்ததாக சரத்குமார் ஒப்புக்கொண்டார். அடுத்த கட்டமாக சரத்குமாருடன் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், வீட்டு உரிமையாளர்கள் வாடகைக்கு விடுவதற்கு முன் வாடகைக்கு வரும் நபர்கள் குறித்த தகவல்களை சரி பார்க்கும்படி போலீஸார் அறிவுறுத்தினர். இது நிமித்தமாக அருகில் உள்ள காவல் நிலையம் மூலமாக அவர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டதுண்டா, அவர்கள் கூறும் தகவல்கள் உண்மைதானா என்பதை அறிந்துகொண்டு வீடு கொடுக்கவேண்டும் என போலீஸார் கேட்டுக்கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE