ரயில்வே வேலை வாங்கித் தருவதாக ரூ. 55 லட்சம் மோசடி

By காமதேனு டீம்

பட்டதாரிகளிடம் ரயில்வே வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி போலி பணிநியமன ஆணை வழங்கி மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

சென்னை வியாசர்பாடியை பகுதியை சேர்ந்தவர் தினேஷ்(33). இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். அப்போது தனக்குத் தெரிந்த விஜயகுமார் மூலமாக ரயில்வேயில் உதவியாளராக வேலை பார்ப்பதாகக் கூறி புஷ்பராஜ் என்ற நபர் அறிமுகமானார்.

குற்றம்சாட்டப்பட்ட புஷ்பராஜ், அவர் தயாரித்த போலி ஐடி, போலி பணி நியமன ஆணை

ரயில்வேத் துறையில் தனக்கு செல்வாக்கு இருப்பதாக புஷ்பராஜ் கூறியுள்ளார். ரயில்வே அடையாள அட்டையைக் காண்பித்து நம்ப வைத்துள்ளார். இதை நம்பிய தினேஷ் ரயில்வேத் துறையில் கிளார்க் வேலை கிடைக்கும் என்ற ஆசையில் புஷ்பராஜிடம் 4.5 லட்சம் ரூபாயை ரொக்கமாக கொடுத்துள்ளார்.

மேலும் தினேஷின் நண்பர்கள் 11 பேர் தலா 3 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 55 லட்ச ரூபாயை புஷ்பராஜிடம் வேலைக்காகக் கொடுத்துள்ளனர். அதன் பிறகு தினேஷும் அவரது நண்பர்களும் பயிற்சி வகுப்பு குறித்தும், வேலை குறித்தும் கேட்டபோதெல்லாம் புஷ்பராஜூம் விஜயகுமாரும் பல்வேறு காரணங்களைக் கூறி நாள் கடத்தி வந்துள்ளனர்.

சில நாட்களுக்குப் பிறகு தெற்கு ரயில்வேயில் தினேஷ் மற்றும் அவரது நண்பர்களுக்கு வேலை உறுதி ஆகிவிட்டதாக புஷ்பராஜூம் விஜயகுமாரும் கூறியுள்ளனர். அதற்கான மருத்துவச் சான்றிதழ், அடையாள அட்டை மற்றும் வேலையில் சேர்வதற்கான ஆணை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகக் கொடுத்துள்ளனர்.

பணி நியமன ஆணையைப் பெற்றுக் கொண்ட தினேஷ் மற்றும் சிலர் பணி நியமண ஆணையுடன் தெற்கு ரயில்வே அலுவலகத்துக்குச் சென்றபோது, அவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட ஆணைகள் போலி எனத் தெரியவந்தது. மேலும் புஷ்பராஜ் என்பவர் ரயில்வேயில் பணியாற்றவே இல்லை என்ற உண்மையும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர்கள் அனைவரும் இன்று சென்னை காவல் ஆணையரைச் சந்தித்து புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE