அண்மையில் வெளியிடப்பட்டிருக்கும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2020-ம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, கடந்த ஆண்டில் இந்தியாவிலேயே அதிக கைது சம்பவங்கள் தமிழ்நாட்டில்தான் நடைபெற்றிருக்கின்றன.
சிறார், பெண்கள் மீதான வழக்குகளும் தமிழகத்திலே அதிகம். அந்த ஆண்டில் அருணாச்சலப் பிரதேசத்தில் மிகக்குறைந்த அளவாக 2,153 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் மிக அதிகபட்சமாக மொத்தம் 13,45,778 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அதற்கு அடுத்தபடியாக, உபியில் 4,54,485 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதைவிட சற்று குறைவாக 4,36,717 பேர் குஜராத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 2-வது இடத்தைவிட, 9 லட்சம் பேர் அதிகம் என்ற குற்ற எண்ணிக்கை உண்மையிலேயே மிகமிக அதிகம்தான்.
கரோனா காலத்தில், ஊரடங்கை மீறியவர்கள் மீது அதிக வழக்குகள் பதியப்பட்டதால்தான் இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்று காவல் துறை சார்பில் இதற்கு விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் பெண்கள், சிறார்கள் மீதான அதிக குற்றங்கள் பதியப்பட்டிருப்பதை அதிர்ச்சியுடன் சுட்டிக்காட்டும் விசிக எம்பி-யான ரவிக்குமார், மேலும் பல விஷயங்களை காமதேனு இணையதளத்துடன் பகிர்ந்து கொண்டார்.
’’தேசிய குற்ற ஆவண அறிக்கையில் தமிழ்நாடு தொடர்பாக வெளியாகியிருக்கும் புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. அதன்படி, சிறார் மீதான தாக்குதல் மிக அதிகமாக நடந்திருப்பது தெரியவருகிறது. தமிழ்நாட்டில் 2020-ம் ஆண்டில் மட்டும் 18 வயதுக்குக் குறைவான சிறார்கள் 3,309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் சிறார்களைக் கைது செய்திருக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது.
18 வயதிலிருந்து 30 வயதுக்கு உட்பட்டவர்கள் எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள் என்ற விவரமும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி 2020-ம் ஆண்டில் மட்டும் அந்த வயதுகொண்டோரில் தமிழ்நாட்டில் 5,39,967 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஆண்கள் 5,14,656 பேர், பெண்கள் 25, 311 பேர். இந்தியாவிலேயே அதிகமான இளம்பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பதும் தமிழ்நாட்டில்தான் என்பதும் கவலையளிக்கிறது.
ஒட்டுமொத்தமாக இந்தியாவிலுள்ள 28 மாநிலங்களையும் சேர்த்து 78,309 இளம்பெண்கள் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 25,311 பேர். ஏறத்தாழ 3-ல் ஒரு பங்கினர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதுபோலவே, 30 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களில் 4,83,236 ஆண்களும், 33,960 பெண்களும் கைது செய்யப்பட்டிருக் கிறார்கள். இந்தப் பிரிவிலும்கூட இந்தியாவிலேயே மிக அதிகமாகப் பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் தான். அதுவும் இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக கைது செய்யப்பட்ட பெண்களில், ஏறத்தாழ 3-ல் ஒரு பங்காக இருக்கிறது.
45 வயதிலிருந்து 60 வயதுக்கு உட்பட்ட பிரிவினரில் 2,29,311 ஆண்களும்; 18,276 பெண்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பிரிவிலும் அதிக எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான். இந்தியாவிலுள்ள 28 மாநிலங்களில் ஒட்டுமொத்தமாகக் கைது செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 42,391. ஏறத்தாழ, அதில் பாதி அளவு பெண்கள் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் 35,118 ஆண்களும் 2,601 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பிரிவிலும் அதிகமாகப் பெண்களை கைது செய்திருப்பது தமிழ்நாட்டில்தான். ஒட்டுமொத்த இந்தியாவில் கைது செய்யப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 5,509. அதில், சுமார் பாதி அளவு பெண்கள் தமிழ்நாட்டில் மட்டும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாக 2020-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 12,65,627ஆண்களும், 80,151 பெண்களும் கைது செய்யப் பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை இந்தியாவிலேயே மிக மிக அதிகமாகும்.
அதிமுக ஆட்சியின் கடைசி ஆண்டில், மக்களுக்கு எதிராக மிக மோசமான முறையில் காவல் துறை அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டிருந்ததையே இது காட்டுகிறது.
ஒருவரைக் கைது செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை, டி.கே.பாசு எதிர் மேற்கு வங்க மாநில அரசு என்ற வழக்கில் (1996) உச்ச நீதிமன்றம் தெளிவாக வரையறுத்துள்ளது. அது, தமிழக கைது நடவடிக்கைகளின்போது பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் ரிஷிகேஷ் ராய் அமர்வு கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி பிறப்பித்த ஆணையில், “கைது செய்யும் அதிகாரம் இருக்கிறது என்பதற்காகவே ஒருவரைக் கைது செய்வது கூடாது. அது ஒருவரது மனித உரிமைகளைப் பறிப்பதாகும்” எனக் குறிப்பிட்டுள்ளது.
“குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும்போது குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் என குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 170-ஐ விசாரணை நீதிமன்றங்கள் தவறாகப் புரிந்துகொண்டுள்ளன” எனக் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், “குற்றம் சாட்டப்பட்டவரைக் காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம் என்றாலோ, அவர் சாட்சிகளைக் கலைப்பார் அல்லது தலைமறைவாகிவிடுவார் என்றாலோ மட்டும்தான் கைது செய்யவேண்டும்” எனத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் தமிழக முதலமைச்சர், அதிமுக ஆட்சியில் இருந்ததுபோல தனது ஆட்சியில் காவல் துறை கண்மூடித்தனமாகக் கைது நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்கக்கூடாது. காவல் துறையினருக்கு கைது நடவடிக்கை குறித்த முறையான வழிகாட்டுதலை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று ரவிக்குமார் தெரிவித்தார்.