மதுராந்தகம்: ரைஸ் மில்லில் பதுக்கப்பட்ட 1,920 புதுச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல்

By கோ.கார்த்திக்

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே சித்தாமூரை அடுத்த தேவாதூர் கிராமத்தில் ரைஸ் மில்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,920 புதுச்சேரி மதுபான பாட்டில்களை மதுவிலக்கு போலீஸார் இன்று பறிமுதல் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்த தேவாதூர் கிராமத்தில் கள்ளத்தனமாக வெளி மாநில மதுபானங்கள் விற்பதாக, சித்தாமூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், உதவி ஆய்வாளர் முரளி மற்றும் போலீஸார் தேவாதூர் கிராமத்தில் ஆனந்த் என்பவருக்கு சொந்தமான பூட்டிக்கிடந்த ரைஸ் மில்லில் சோதனை மேற்கொண்டனர்.

இதில், மறைத்து வைத்திருந்த புதுச்சேரி மாநிலத்தின் 180 மி.லி கொண்ட 1,920 மதுபான பாட்டில்களை கைப்பற்றினர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்கு மதுராந்தகம் மதுவிலக்கு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. மதுராந்தகம் மதுவிலக்கு போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், புதுச்சேரி மாநிலத்திலிருந்து கள்ளத்தனமாக மது பாட்டில்களை கொண்டு வந்து விற்பனை செய்ததாகக் கூறப்படும் தேவாதூரை சேர்ந்த அலெக்ஸ் என்பவரை மதுவிலக்கு போலீஸார் தேடி வருகின்றனர்.

இங்கு மட்டுமல்லாது மதுராந்தகம் செய்யூர், சோத்துப்பாக்கம் அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், சூனாம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிற மாநில மது வகைகள் தாரளமாக விற்கப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த மதுவிலக்கு போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE