சென்னை மந்தைவெளியில் அரியவகை மண்ணுளிப் பாம்பு மீட்பு

By காமதேனு டீம்

சென்னை, மந்தைவெளிபாக்கம் பகுதியில் கட்டுமானப் பணி நடந்து வரும் பகுதியில் மரப்பொந்து அருகே மண்ணுளிப் பாம்பு இருப்பதாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மயிலாப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணுச்சாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மண்ணுளிப் பாம்பை மீட்டனர். சுமார் 3 அடி நீளமுள்ள இந்த மண்ணுளிப் பாம்பு, அரிய வகையான சிவப்பு மண்ணுளிப் பாம்பு என தெரியவந்தது.

மீட்கப்பட்ட இந்த அரிய வகைப் பாம்பை வனத் துறையிடம் தீயணைப்பு வீரர்கள் ஒப்படைத்தனர். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் அதிக அளவில் காணப்படும் மண்ணுளிப் பாம்பு பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்படுகிறது. மண்ணுளிப் பாம்புகளில் இந்தச் சிவப்பு நிற மண்ணுளிப் பாம்புக்கு, சர்வதேச சந்தையில் அதிக மவுசு உள்ளது. குறிப்பாக சீனா, மலேசியா போன்ற நாடுகளுக்கு இந்தப் பாம்புகள் கடத்தப்பட்டு ‘பிளாக் மேஜிக்’ எனப்படும் பில்லி, சூனிய வேலைகள் மற்றும் மருத்துவத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், பிடிபட்ட பாம்பு கடத்தல் கும்பலால் பதுக்கி வைக்கப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த அரியவகைப் பாம்புகளை, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டப் பிரிவு 4-ன் கீழ் வனத் துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE