கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதியிடம் கஞ்சா பறிமுதல்

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதியிடம் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள், குண்டர் தடுப்புப் பிரிவு கைதிகள், உயர் பாதுகாப்புப் பிரிவு கைதிகள் என 1,500-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குற்றங்களுக்கு தகுந்தவாறு பல்வேறு பிளாக்குகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் கஞ்சா, செல்போன் உள்ளி்ட்ட தடை செய்யப்பட்ட பொருட்களின் புழக்கத்தை தடுக்க சிறை காவலர்கள் அடிக்கடி கைதிகள் தங்கியிருக்கும் அறைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிறைத்துறை காவலர்கள் இன்று வழக்கம் போல் கோவை மத்திய சிறையில் சோதனை செய்தனர். அப்போது வால்மேடு பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதியான ரகீம் என்பவரிடம் கஞ்சா இருப்பதை கண்டறிந்து சிறை காவலர்கள் அவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து ஜெயிலர் சரவணகுமார் இவ்விவகாரம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் கைதி ரகீம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையத்தைச் சேர்ந்த ரகீம், கஞ்சா விற்ற வழக்கு தொடர்பாக அனுப்பர்பாளையம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, கடந்த மாத இறுதியில் கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE