சென்னையில் சிறை ஆய்வாளரைத் துப்பாக்கியால் சுட்டுவிடுவதாகக் காவலர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மன அழுத்தம் காரணமாக அவ்வாறு அவர் நடந்துகொண்டாரா என்கிற ரீதியில் விசாரணை நடந்துவருகிறது.
சென்னை பூந்தமல்லி கரையான்சாவடியில் தனி கிளைச்சிறை உள்ளது. இச்சிறையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த காவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு் வருகின்றனர். இந்நிலையில் இன்று (செப் 11) அதிகாலை சிறையில் இடதுபுறம் சாலைப் பகுதியில் காவலர் கோவிந்தன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு ஆய்வுசெய்ய வந்த ஆய்வாளர் சுரேந்தர் நாயர், பணி நேரத்தில் காவலர் கோவிந்தன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தைப் பார்த்து அவரைக் கண்டித்திருக்கிறார். பின்னர், பாரா புத்தகத்தை (பணிக்கு வந்தவர்கள் குறித்து பதிவேடு) காண்பிக்குமாறும் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கோவிந்தன் உடனே கையில் இருந்த துப்பாக்கியைக் காண்பித்து சுட்டுவிடுவதாக ஆய்வாளரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து ஆய்வாளர் மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மன அழுத்தம் காரணமாகக் காவலர் கோவிந்தன் இவ்வாறு நடந்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து கோவிந்தனைப் போலீஸார் கீழ்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துடன் ஆய்வாளரை மிரட்டியது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.