மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி 10 லட்ச ரூபாய் மோசடி: வாலிபர் தீக்குளித்து தற்கொலை

By காமதேனு டீம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவர் சென்னை சூளைமேடு கில் நகர் 2-வது தெருவில் வசித்து வந்தார்.

பாலகிருஷ்ணனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ரியஸ் எஸ்டேட் தொழில் செய்துவரும் பழனிக்குமார்(57) என்பவருடன் இரண்டு வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 23 லட்சம் ரூபாய் கொடுத்தால் மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக பழனிக்குமார் கூறியதை நம்பி அவரிடம் பணத்தைக் கொடுத்துள்ளார் பாலகிருஷ்ணன்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட பழனிக்குமார் பல மாதங்களாகியும் வேலையும் வாங்கி தராமல் கொடுத்த பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றிவந்துள்ளார். பாலகிருஷ்ணன் தொடர்ந்து பணம் கேட்டு அழுத்தம் கொடுத்ததையடுத்து, பழனிக்குமார் தவணை முறையில் 13 லட்ச ரூபாயைக் கொடுத்துவிட்டு மீதமுள்ள 10 லட்ச ரூபாய்க்குக் காசோலை வழங்கியுள்ளார்.

பாலகிருஷ்ணன் அந்தக் காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தது.

இது குறித்து பழனிக்குமாரிடம் கேட்டபோது அவர் முறையான பதில் கூறாமல் பாலகிருஷ்ணனை மிரட்டிவந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 10) காலை பாலகிருஷ்ணன் மீண்டும் சூளைமேட்டில் உள்ள பழனிக்குமாரின் வீட்டிற்குச் சென்று பணத்தைக் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த பாலகிருஷ்ணன் திடீரென தான் கொண்டுவந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றிப் தீப்பற்ற வைத்துக்கொண்டார். இதனைப் பார்த்த பழனிக்குமார் அலறி அடித்துக்கொண்டு பாலகிருஷ்ணன் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து தனது காரில் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். 97 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த பாலகிருஷ்ணன் நேற்று (செப்டம்பர் 10) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்கொலை குறித்து சூளைமேடு போலீஸார் விசாரணை நடத்தி பழனிக்குமார் மீது தற்கொலைக்குத் தூண்டுதல், மோசடி உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். விசாரணையில் பழனிக்குமார் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி பின்னர் விருப்ப ஓய்வுபெற்று தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருவது தெரியவந்தது.

மேலும் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளைத் தனக்குத் தெரியும் என பாலகிருஷ்ணனை நம்பவைத்து பண மோசடியில் ஈடுபட்டதால், அந்த அதிகாரிகள் யார் எனவும், பழனிக்குமார் இதே போல் வேறு ஏதேனும் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE