டான்ஸில் தொடங்கி அரிவாள் வெட்டில் முடிந்த திருமண நிகழ்ச்சி

By காமதேனு டீம்

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், டான்ஸ் ஆடுவதில் இருவீட்டார் இடையே ஏற்பட்ட தகராறில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை அப்போலோ மருத்துவமனை அருகே தனியார் திருமண மண்டபம் ஒன்று உள்ளது. இங்கு வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தினகரனுக்கும், கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மஞ்சுளாவுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட இரு வீட்டாரும், நண்பர்களும் டிஜே பாடலுக்கு ஏற்ப நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது மணமகளின் அண்ணன் வினோத்துடைய நண்பர்களுக்கும், மணமகனின் நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் தொடங்கியது. ஒருகட்டத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றவே வெளியில் சென்ற வினோத்தின் நண்பர்கள் ஆகாஷ், ஜான், தோத்து, வசந்த் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் கையில் ஆயுதங்களுடன் திடீரென திருமண மண்டபத்தின் உள்ளே புகுந்தனர். மணமகனின் நண்பர்களான தினேஷ், யுவராஜ், ஹேமந்த் அவர்களை சரமாரியாகத் தாக்கி விட்டுத் தப்பிச் சென்றனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்து, வெட்டுப்பட்டவர்களை மீட்டு அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த புது வண்ணாரப்பேட்டை போலீஸார், திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாகக் குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் பங்குபெறும் நிலையில், மணமக்களின் நண்பர்கள் என பங்கேற்ற இருதரப்பினர் டான்ஸ் ஆடுவதில் மோதல் ஏற்பட்டு வெட்டிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE