சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (37). இவர், அயனாவரம் ரயில்வே பாதுகாப்புப் படையில் காவலராக பணிபுரிந்து வந்தார்.
அயனாவரம் காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்த ராஜேஷ்குமார், தலைமைக் காவலராக பதவி உயர்வு கிடைத்ததால், 5 நாட்களுக்கு முன்பாக திருச்சிக்குப் பயிற்சிக்காகச் சென்றார். அங்கு ராஜேஷ்குமார், குடிபோதையில் அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டதால் அதிகாரிகள் அவரை பணியிடை நீக்கம் செய்தனர்.
வீட்டுக்குத் திரும்பிய ராஜேஷிடம், அவரது மனைவி குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டது குறித்து கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ராஜேஷின் மனைவி கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், ராஜேஷ் குடிபோதையில் வீட்டின் பின்புறம் உள்ள படிக்கட்டில் இறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், ஐசிஎப் போலீஸார் சென்று உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ராஜேஷ்குமார் குடிபோதையில் பின்பக்கமாகத் தவறி விழுந்ததில் படிக்கட்டில் மோதி அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்தது.