சென்னையில் காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு

By காமதேனு டீம்

மகேஷ்வரன்

சென்னை, பசுமை வழிச்சாலை அறிஞர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் மகேஷ்வரன் (25). பி.சி.ஏ. பட்டப்படிப்பு முடித்த இவர், பணிக்குச் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர்சுற்றி வந்தார். இதனால் தாய் பஞ்சவர்ணம் மகன் மகேஷை கண்டித்துள்ளார்.

இந்நிலையில் செப்டம்பர் 4-ம் தேதி வீட்டின் மேல் அறையில் தூங்கச் செல்வதாகக் கூறிச் சென்ற மகேஷ்வரன், காலையில் எழுந்து வரவில்லை. இதனால் தாய் பஞ்சவர்ணம் சென்று பார்த்தபோது மகேஷ் அறையில் இல்லை. நண்பர்கள் வீடு, அக்கம்பக்கம் என பல இடங்களில் தேடியும் மகேஷ் கிடைக்கவில்லை.

பின்னர் பஞ்சவர்ணம், காணாமல்போன மகனைக் கண்டு பிடித்துத் தருமாறு அபிராமபுரம் காவல் நிலையத்தில் செப்டம்பர் 5-ம் தேதி புகார் அளித்திருக்கிறார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மகேஷை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை மணற்பரப்பில் ஆண் பிரேதம் ஒன்று நேற்று கரை ஒதுங்கியது. இதைப் பார்த்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனடிப்படையில், பட்டினப்பாக்கம் போலீஸார் பிரேதத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சென்னையில் காணாமல்போன 25 வயதுடையவர்கள் குறித்த தகவல்களை போலீஸார் சேகரித்தனர்.

அப்போது, அபிராமபுரம் காவல் நிலைய எல்லையில் காணாமல் போன மகேஷ்வரனின் உடல் என அடையாளம் காணப்பட்டது. பின்னர், அவரது தாய் பஞ்சவர்ணம் நேரில் வந்து அடையாளம் காண்பித்ததை அடுத்து சடலம் காணாமல்போன மகேஷ் என்பது உறுதியானது. இதைத் தொடர்ந்து மகேஷ்வரன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டரா என பல கோணங்களில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று மதியம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடுவர் முன்பு கார்த்திக் (25) என்பவர் ஆஜரானார். பட்டினப்பாக்கம் கடற்கரை மணற்பரப்பில் ஒதுங்கிய மகேஷ்வரன் தனக்கு நண்பர் என்றார்.

இருவரும், செப்டம்பர் 4-ம் தேதி இரவு பட்டினப்பாக்கத்தில் ஒன்றாக அமர்ந்து மதுபானம் அருந்தியதாகக் கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மகேஷ்வரனை அடித்துக் கொன்றுவிட்டு, உடலைக் கடலில் தள்ளிவிட்டுச் சென்றதாகத் தெரிவித்துள்ளார்.

உடனே நடுவர், சிறிது நேரம் வெளியே நிற்குமாறு கார்த்திக்கிடம் கூறினார். வெளியே வந்த கொலைக் குற்றவாளி கார்த்திக் அங்கிருந்து திடீரென மாயமானார். இது தொடர்பாக சைதாப்பேட்டை காவலர்கள் அளித்த தகவலின் பேரில், சரணடைய வந்து தப்பி ஓடிய கார்த்திக்கை போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE