10 ஆண்டுகளில் 100 பேர்: மெரினா கடலில் மூழ்கி உயிரிழப்பு

By காமதேனு டீம்

எச்சரிக்கை பேனர்

சென்னை மெரினா கடற்கரையில். இளைஞர்கள் நண்பர்களுடன் சேர்ந்து கடலில் ஆழமான பகுதியில் சென்று குளிப்பது வாடிக்கை. இப்படி செய்யும்போது ராட்சத அலையில் சிக்கி அவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழக்கும் துயரச் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்ந்துவிடுகின்றன.

இதனால் தமிழக அரசும் காவல் துறையும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு இன்மையால், அரசு மற்றும் காவல் துறை எச்சரிக்கையை மீறி கடலில் குளிக்கச் செல்கின்றனர்.

இதையடுத்து, கடற்கரையை ஒட்டியுள்ள காவல் நிலையங்களுக்கு உட்பட்ட கடற்கரை பகுதிகளில் சென்னை மாநகர காவல்துறை ஒரு முயற்சி எடுத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், கடலில் குளிக்கச் சென்ற எத்தனை பேர் மூழ்கி உயிரிழந்தனர் என்கிற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர் முதல் கிழக்கு கடற்கரைச் சாலை வரை உள்ள கடற்கரை பகுதியில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் 43 பேரும், மெரினாவில் 23 பேரும் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்ததாகவும், இங்கு ஆழமான கடல் பகுதி என்பதால் கடலில் இறங்கிக் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவிப்பு பலகைகள் சாஸ்திரிநகர் காவல் நிலையம் சார்பில் வைத்துள்ளனர்.

இதேபோல் சென்னை கடற்கரை பகுதிகளில், கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் குளிக்கச் செல்பவர்களே உஷார்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE