சென்னை: மேற்குவங்கம் மாநிலம் நியூ ஜல்பைகுரியில் இருந்து சென்னைக்கு வந்த விரைவு ரயிலில் 5 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடத்திய இருவரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
சென்னை - சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான ரயில்வே போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மேற்குவங்கம் மாநிலம் நியூ ஜல்பைகுரியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடைக்கு விரைவு ரயில் வந்தது.
அதிலிருந்து இறங்கி வந்தவர்களை கண்காணித்தபோது, இருவர் மீது ரயில்வே போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களை மறித்து, அவர்களின் பைகளை சோதித்தபோது, அதில் 5 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதையடுத்து, அவர்களை சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த உமர் அலி (28), ஷரபுதின் சிபிலி (23) ஆகியோர் என்பதும். விசாகப்பட்டினத்தில் இருந்து எடுத்து வந்தததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை ரயில்வே போலீஸார் கைது செய்து, 5 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
» கொடைக்கானலில் இடியுடன் கூடிய கனமழை: மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
» வசீகர வீடியோ பதிவு: மலைகளுக்கு நடுவே கம்பீரமாக செல்லும் நீலகிரி ரயில்!