அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ளசெம்பட்டியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவர், அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத் திட்டப் பிரிவில் தற்காலிக கணினி உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், முதியோர், விதவைகள் உள்ளிட்டோருக்கான உதவித்தொகைகளை ரவிக்குமார் 2019-ம் ஆண்டு முதல் தனது வங்கிக் கணக்கில் வரவு வைத்து, ரூ.40 லட்சம் மோசடிசெய்ததாகக் கூறப்படுகிறது. அண்மையில், சென்னையில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட தணிக்கையில் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. ஒரே வங்கிக் கணக்குக்கு ஏராளமானோரின் உதவித்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது, இந்த ஆய்வில் தெரியவந்தது. இந்த மோசடி குறித்து வருவாய், கருவூலம் மற்றும் காவல் துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.