புதுச்சேரி குடியிருப்பு பகுதிகளில் நடமாடும் ‘போலி மதுபான’ ஆலை கண்டுபிடிப்பு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி அருகே குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் லாரியில் போலி மதுபானம் தயாரிக்கும், நடமாடும் போலி மதுபான தொழிற்சாலையை தமிழக போலீஸார் கண்டறிந்தனர். சாராய கேன்கள், போலி மதுபான ஸ்டிக்கர், ஹோலோகிராம், சீலிங் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். ஆனால், கைதானோர் மீது ஏற்கெனவே வழக்கு இருந்தும் வில்லியனூர் போலீஸார் இதை கண்டறியாமல் கோட்டை விட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக சென்ற வாகனத்தில் போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். இதில் புதுச்சேரி அரும்பார்த்தப்புரம் பகுதியை சேர்ந்த சக்திவேல், ஆண்டியார்ப்பாளையம் அண்ணாதுரை, சதீஷ் மற்றும் ஓட்டுநர் பண்ருட்டி ரங்கா, கனகச்செட்டிக்குளம் ராஜசேகர், நாமக்கல் கிருஷணமூர்த்தி (45) ஆகியோர் மீது சந்தேகித்து விசாரணை நடத்தினர்.

இதில் புதுச்சேரி வில்லியனூர் அருகேயுள்ள உளவாய்க்கால் கிராமத்தில் வெற்றிவேலன் நகரில் போலி மதுபான தொழிற்சாலை இயங்குவதாக தெரிவித்துள்ளனர். இரவு நேரத்தில் போலி மதுபான பாட்டில்கள் தயார் செய்து தமிழக பகுதிகளுக்கு எடுத்து சென்று விற்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து தமிழக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் மற்றும் கலால்துறை போலீஸார் கைது செய்யப்பட்டவர்களை அழைத்துக் கொண்டு புதுச்சேரி மாநிலம் வில்லியனூர அருகே உள்ள உளவாய்க்கால் பகுதிக்கு வந்தனர்.

அங்குள்ள வெற்றிவேலன் நகர் மனை பிரிவில் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு பகுதியில் நின்றிருந்த மினிலோடு கேரியர் மற்றும் லாரியை சோதனை செய்தனர். பின்னர் அங்கிருந்த மினி லோடு கேரியர் வண்டியை திறந்து பார்த்தபோது, அதில் சாராய கேன்கள், காலி மதுபாட்டில்கள், மூடிகள், போலி ஹோலோகிராம், போலி மதுபான ஸ்டிக்கர் மற்றும் மதுபான பாட்டில் தயார் செய்து சீலிங் செய்யும் இயந்திரம் போன்ற போலி மதுபாட்டில் தயாரிக்க பயன்படுத்திய மூலப்பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

பின்னர் வாகனத்தில் இருந்த மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் மற்றொரு மூடி போட்ட லாரியும் பறிமுதல் செய்து அதை திறந்து பார்த்தபோது அதில் ஒன்றும் இல்லை. பிறகு தமிழக கலால்துறை அதிகாரிகள் புதுவை கலால்துறை மற்றும் வில்லியனூர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, புதுச்சேரி கலால்துறை தாசில்தார் சிலம்பரசன், வில்லியனூர் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், வருவாய் துறை ஆய்வாளர் நாகராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதனை தொடர்ந்து தமிழக கலால் துறை அதிகாரிகள், புதுச்சேரி வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் முன்னிலையில் வாகனங்களை பறிமுதல் செய்து உளுந்தூர்பேட்டைக்கு கொண்டு சென்றனர்.

புதுச்சேரியில் குடியிருப்பு பகுதிகளில் போலி மதுபான தொழிற்சாலை இயங்கியது தொடர்பாக ஏதும் அறியாமல் புதுச்சேரி வில்லியனூர் போலீஸார் கோட்டை விட்டுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.

மேலும் இதுபற்றி விசாரித்தபோது, தற்போது தமிழகத்தில் கைது செய்யப்பட்டோர் மீது புதுச்சேரியில் சாராய கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், போலீஸார் அவர்களை கண்டுக்கொள்ளாததால் நடமாடும் போலி மதுபான தொழிற்சாலையை நடத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE