சிவகாசியில் கடன் பிரச்சினையால் குடும்பத்தினர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் 6 பேர் கைது

By அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: சிவகாசி அருகே பாலாஜி நகரில் கடன் பிரச்சினையால் மகன், மகள், பேத்தியை கொலை செய்து ஆசிரிய தம்பதி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், வட்டிக்கு பணம் கொடுத்த 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரை சேர்ந்தவர் லிங்கம் (45). இவரது மனைவி பழனியம்மாள் (47). இருவரும் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு ஆனந்தவள்ளி (27) என்ற மகளும், ஆதித்யா (14) என்ற மகனும் இருந்தனர். ஆனந்தவள்ளிக்கு திருமணமாகி சஷ்டிகா என்ற 2 மாத குழந்தை உள்ளது. ஆதித்யா சிவகாசியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடன் பிரச்சினை காரணமாக கடந்த 22ம் தேதி இரவு ஆதித்யா, ஆனந்தவள்ளி, சஷ்டிகா ஆகியோருக்கு விஷம் கொடுத்து விட்டு லிங்கம், பழனியம்மாள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

போலீஸ் விசாரணையில், கடன் பிரச்சினை காரணமாக லிங்கம் கடந்த இரு மாதங்களுக்கு முன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் கடன் வாங்கிய சிலரது பெயரை குறிப்பிட்டு, அவர்கள் அளித்த மிரட்டலால் தான் தற்கொலை செய்ததாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று லிங்கத்திற்கு கடன் கொடுத்தவர்களில் 6 பேரை திருத்தங்கல் காவல் நிலையத்திற்கு வரவழைத்து டி.எஸ்.பி சுப்பையா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிவில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த அருண்குமார் (43), திருத்தங்களைச் சேர்ந்த கிருஷ்ணன் (42), கொங்கலாபுரத்தைச் சேர்ந்த வி.முருகன் (69), எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த எஸ்.முருகன் (53), மணிவண்ணன் (43), சித்துராஜபுரத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் (44) ஆகிய 6 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், கந்துவட்டி தடைச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இது குறித்து டிஎஸ்பி சுப்பையாவிடம் கூறியவாது: ஆசிரியர் லிங்கத்திற்கு வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அதீத வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என எச்சரிக்கை விடுத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE